Tamilnadu

“'காசி - தமிழ் சங்கமம்’ வெறும் சங்கிகளுக்கான சங்கமமா? - ஆளுநரின் உள்நோக்கம் என்ன?” : கி.வீரமணி ஆவேசம்!

தமிழ்நாடு அரசைத் தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேசப் போகிறோம் என்றால், அதன் உள்நோக்கம் என்ன? என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமா? பங்கேற்பாளர்களை இந்துத்துவச் சிந்தனைக்கு மடைமாற்றும் முயற்சியா? யாருடைய இன்பச் சுற்றுலா இந்தப் பயணம்?

தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தொடர்பைப் பேசுவதற்கான நிகழ்வு என்றால், இதில் தமிழ்நாடு அரசு, அதன் பண்பாட்டுத் துறையின் பங்களிப்பு என்ன? கலந்து ஆலோசித்தனரா? தமிழ்நாடு அரசைத் தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேசப் போகிறோம் என்றால், அதன் உள்நோக்கம் என்ன? ஆளுநர் நடத்த விரும்பும் தனி ஆவர்த்தனத்திற்கு ‘‘அய்.அய்.டி. தாளமிடுகிறதா?’’

ராஜ்பவனும், அய்.அய்.டி.யும், இருக்கும் சாலை சர்தார் படேல் சாலை என்பதால் ஏதோ, தனியாகத் தனது எதேச்சதிகார எல்லையில் இருக்கின்றது என தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் போலும் ஆளுநர்!

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். மக்கள் வரிப் பணம் இப்படியா செலவழிக்கப்படுவது? திராவிட நாகரிகம் புறக்கணிப்பு - சங்கிகளின் சங்கமம் சிந்துவெளி நாகரிகம் - திராவிட நாகரிகம் - கீழடி ஆய்வுகள் இவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இந்த சங்கமம் வெறும் சங்கிகளுக்கான சங்கமமா? என்ற கேள்வியே எழும்புகிறது. விடையளிப்பார்களா?” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மேற்கத்திய கலாச்சாரத்தால் நாடு கெட்டதா? RSS பிரச்சாரகர்போல் பேசுவது ஆளுநருக்கு அழகல்ல”: கி.வீரமணி ஆவேசம்