Tamilnadu
“மழைநீர் தேங்காமல் கவனமாக பார்த்துகொண்ட விடியல் அரசு” : ஆதாரத்துடன் விளக்கிய மயிலை திமுக எம்.எல்.ஏ!
வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்றைய முன்தினம் இரவு பெய்த மழை நேற்று முழுவதும் ஓயாமல் பெய்து வந்தது. முன்னதாக பருவமழை எச்சரிக்கை நடவடிக்கையாக பலவற்றை தமிழக அரசு மேற்கொண்டது.
அதில் முக்கியமானவையாக சாலைகளில் வெள்ளநீர் தேங்காமல் இருக்க தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளின் எதிரொலியால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்கிறது.
பொதுவாக சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் எப்போது மழை பெய்தாலும் சென்னை மக்களுக்குப் பிரச்னையாகவே இருந்தது.
குறிப்பாகச் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும். இதனால் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் அதிமுக செய்து வைத்த அரைகுறை வேலை காரணமாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரிவர செய்யாத காரணத்தினாலும் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டதால் தான் மழை நீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டும் சென்னையில் பருவமழையின் போது வெள்ள நீர் சாலையில் தேங்கி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் இனி வரும் மழைக்காலங்களில் மக்கள் அவதிப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு இதற்கென்று தனி குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி சென்னை முழுவதும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்கள் கண்டறியும் பணிகளும் நடைபெற்றது.
பின்னர் சென்னையில் உள்ள அனைத்து வடிகால் வாய்களும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தூர்வாரப்பட்டது. அதேபோல் அனைத்து தெருக்களிலிருந்த கால்வாய்களும் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது.
இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் என பலரும் நேரடியாகச் சென்று அடிக்கடி ஆய்வு செய்து வந்தனர். இப்படி முதலமைச்சரின் மேற்பார்வையில் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் விரைந்து நடைபெற்றதால் சென்னையில் 12 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது.
மேலும் சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் தேங்குகிறதா என்பதை கண்காணிக்க, பல்வேறு சுரங்கப்பாதைகளில் சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்பதாக தெரிகிறதோ அங்கெல்லாம் மோட்டார் மூலம் அதிகாலையிலேயே தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் கடந்த ஆண்டு பெய்து வந்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால் தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த துரித நடவடிக்கை காரணாமாக கடந்த ஆண்டு எங்கெல்லாம் வெள்ள நீர் தேங்கியதோ இந்தாண்டு அங்கே எந்த ஒரு நீரும் இல்லாமல் முழுமையாக வெள்ள நீர் அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., தா.வேலு, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ராமராவ் சாலை, கேசவப்பெருமாள் தெரு, வி.கே.அய்யர் சாலை, பட்டம்மாள் தெரு, டிடிகே சாலை, பாலகிருஷ்ணா சாலை, சுந்தரேஸ்வரர் சாலை, south canal பேங்க் சாலை, கபாலீஸ்வரர் கோயில், பி.எஸ்.சிவசாமி சாலை, பகவத்சலம் சாலை, சீத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளின் புகைப்படங்கள் இடப்பெற்றிருந்தது.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், கடந்த செப்டம்பர் மாதம் பெய்த மழை காரணமாக மேற்கு விநாயகம் தெருவில் வீட்டின் முன் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அப்போதே புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பெய்த கனமழையில், அந்த பகுதியில் வெள்ளநீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் இது தான் உண்மையான சிங்கார சென்னை 2.O என தி.மு.க அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், அரசும் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!