Tamilnadu
“ராஜேந்திர சோழனின் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு” : கல்வெட்டில் கிடைத்த சேதி என்ன தெரியுமா ?
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மண்ணில் புதைந்திருந்த நான்கு அடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள் கிராமத்தினர் உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டது.
அந்த நான்கு தூண்களில் இரண்டு ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும். தற்போது அங்கிருக்கும் சிவன் கோயிலில் இந்த தூண்கள் இருந்தன. பின்பு வந்த ஒய்சாள மன்னர்களின் காலத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழைய கோயிலை புத்துப்பித்துள்ளனர்.
அந்த பழைய கோயிலில் இருந்த கல் தூண்கள் வெளியே எடுத்துவரப்பட்டு அதன் மீது கல்லால் ஆன தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. அதன் பின்னர் இந்த பகுதியில் வீடுகள் கட்ட தொடங்கிய பின் இதன் தொட்டியில் உள்ள மேல் பலகைகள் எல்லாம் இந்த தூண்களை மூடி மண்ணில் புதைந்து போனது.
இந்த கல்வெட்டு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது, "முதலாம் ராஜேந்திரனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் இக்கல்வெட்டு, முரைசூர் நாட்டு தென்கரை குணநல்லூர் மஹாதேவருக்கு திருவமுதுக்காக பராந்தகன் இரணமுகநான செம்பியன் மிலாடுடையான் என்பவன் இவ்வூராரிடம் பொன் கொடுத்து நிலம் வாங்கி தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது.
தானத்தின் எல்லைகளை குறிப்பிடும் போது ஒத்தைக்கல் மலையம்மன் என்ற ஒரு அம்மனின் பெயரைக் குறிப்பிடுகிறது. அந்த அம்மன் இன்றும் மாரியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளதும் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓசூருக்கு முரைசூர் நாடு என்ற பெயர் இக்கல்வெட்டில்தான் முதன்முதலாக வருகிறது.
இதுவரை 13ம் நூற்றாண்டில் தான் முரசுநாடு என்ற பெயர் வந்ததாகக் கருதப்பட்டுவந்தது. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓசூர் முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வெளிப்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சோழர் காலத்தில் மதகொண்டபள்ளியின் பெயர் குணநல்லூர் என்று இருந்துள்ளது.
பின்னர் ஒய்சாளர்கள் இந்த பகுதியை ஆண்டபோது இப்பகுதியை ஆட்சி செய்து வந்த பூர்வாதராயர்கள் இந்த கோயிலை புனரமைத்துள்ளனர். அதன் பின்பு இந்தக் கோயிலின் பெயர் திரு அங்கநாதர் என்றும் அங்கீஸ்வர நாயனார் என்றும் அழைக்கப்பட்டு தற்போது அர்க்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிக பழமையான கல்வெட்டு இதுவாகும். இதுவரை ராஜேந்திரனின் 24 மற்றும் 26ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் முறையே கங்காவரம் மற்றும் அனுசோனை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. அவை நடுகல் கல்வெட்டுகளாகும்.
தற்போது கண்டறியப்பட்டுள்ளது 6 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும். மேலும் இது கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தைக் குறிக்கும் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகப்பழமையான கோயில் மதகொண்டப்பள்ளி அர்க்கீஸ்வரர் கோயில் என்பதும் ஓசூர் 1020ம் ஆண்டிலேயே முரசுநாடு என்றழைக்கப்பட்டதும் தெரியவருகிறது. எனவே இக்கல்வெட்டு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டாகும். என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?