Tamilnadu

'ஒரே ஒரு தீப்பொறி.. 5 வண்டி க்ளோஸ்..' சென்னையில் தீபஒளியின்போது வெடி வெடித்ததால் நிகழ்ந்த சோகம் !

தீபஒளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டதில் 5 இரு சக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபஒளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் வெவ்வேறு நாளில் நடைபெறும் இந்த பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 25 (நேற்று) கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து பூஜை செய்து புத்தாடை அணிந்து தீபஒளியை கொண்டாடினர். சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

அந்த வகையில் சென்னை ராய்ஸ் ரோடு அவ்வை சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், நேற்று இளைஞர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசில் இருந்து வெளியேறிய தீப்பொறிகள், வீட்டின் அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் பட்டுள்ளது.

அப்போது அந்த வாகனம் திடீரென பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீ அப்படியே பரவி அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 வாங்கனங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் தாமரைச் செல்வன், பகிர், ராஜேஷ், சையத், ஜேசுராஜ் ஆகிய 5 பேரின் இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகின. தீயணைப்புத்துறையினரின் துரித நடவடிக்கையால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தீபஒளி பட்டாசின் எதிரொலி: சென்னையில் மோசமான காற்று மாசு.. -மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல் !