Tamilnadu
லக்கேஜ்ஜில் வைத்து அரியவகை விலங்குகள் கடத்தல்: பரபரப்பை கிளப்பிய சென்னை பயணி; ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட தேவாங்கு வகையை சோ்ந்த, 5 அரிய வகை விலங்குகளை, சென்னை விமானநிலையத்தில், சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனா். அரியவகை விலங்குகளை, மீண்டும் அதே விமானத்தில் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பினா்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவர் உடைமைகளை முழுமையாக சோதித்தனர்.
அப்போது அந்த பயணியின் பை ஒன்று லேசாக அசைவது போல் தெரிந்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பையைத் திறந்து பாா்த்தனா். அதனுள் அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் 5 எண்ணிக்கையில் ஆனது உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அடுத்து பையை மீண்டும் மூடி வைத்துவிட்டு, அந்த பயணியை விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி, இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை விலங்குகள். இதை நான் வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் அவரிடம் அந்த விலங்குகளுக்கான, எந்த ஆவணங்களும் இல்லை.
வெளிநாட்டிலிருந்து இதை போல், விலங்குகள் கொண்டு வரும்போது, அந்த விலங்குகளை முதலில் மருத்துவ பரிசோதனை செய்து, அதில் நோய்க் கிருமிகள் ஏதாவது இருக்குதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் வேண்டும்.
அதை அடுத்து, அந்த விலங்குகளை வெளி நாட்டில் இருந்து, இந்தியாவுக்கு எடுத்து வருவதற்காக, சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடம், தடையில்லா சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, இந்திய வனவிலங்கு துறை இடமும் அனுமதி பெற்று, அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.
இதை போல் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால், அந்த பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு இது, ஆப்பிரிக்கா, இந்தோநேசியா நாடுகளில் உள்ள, தேவாங்கு ரகத்தை சோ்ந்த அபூர்வ வகை விலங்குகள். இதை ஆங்கிலத்தில் கஸ்கஸ் "CUS CUS"என்று கூறுவாா்கள்.
மேலும் இதனால் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் நம் இந்தியாவுக்குள் பரவிவிடும். இதை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதை அடுத்து இந்த ஐந்து அபூர்வ வகை விலங்குகளையும், அது கொண்டுவரப்பட்ட அதே தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பினார்கள்.
அதற்கான செலவுத்தொகை அனைத்தையும் இந்த விலங்குகளை கடத்தி வந்த அந்த சென்னை பயனிடம் இருந்து வசூல் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு இந்த அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த பயணியை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா், கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.
இதைப்போல் அவ்வப்போது தாய்லாந்து நாட்டிலிருந்து அபூா்வ வகை விலங்குகள் சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வருவதும், சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டுக்கே திரும்பி அனுப்புவதும் வழக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!