Tamilnadu

“15 வருடம் நன்றியுடன் இருந்த ஐந்தறிவு ஜீவனின் அரசனே..!” - செல்லப்பிராணிக்கு பதாகை வைத்து அஞ்சலி..

வீட்டில் 15 ஆண்டுகளாக வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய் இறந்ததை தாங்க முடியாமல், வீட்டின் உரிமையாளரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஞ்சலி பதாகை வைத்துள்ள நிகழ்வு உடுமலையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது வீட்டில் கடந்த 15 வருடங்களாக ஜாக்கி என்ற நாட்டு நாய் வளர்ந்து வந்துள்ளது. இந்த நாயை கல்யாணராமன் தங்களது வீட்டில் உள்ள ஒரு நபராக கருதி வந்துள்ளார். இந்த நாயானது இவர்களுக்கு மட்டுமின்றி, அதன் சுற்றி இருக்கும் பகுதிக்கும் செல்லப்பிராணியாக இருந்து வந்துள்ளது. இதை அவர்கள் செல்லமாக ஜாக் என்றே அழைப்பர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஜாக்கி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது. ஜாக்கியின் பிரிவை தாங்க முடியாத அதன் உரிமையாளர்கள் அதற்கு முறைப்படி இறுதிச்சடங்கு நடாத்தியுள்ளனர். மேலும் கல்யாணராமனின் மகன் கணேஷ் ராம் தனது செல்லப்பிராணி மறைவுக்கு அஞ்சலி பதாகை வைக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாக்கியின் மறைவுக்கு அஞ்சலி பதாகை வைத்துள்ளார். அந்த அஞ்சலி பதாகையில், "எங்களுடன் 15 வருடம் நன்றியுடன் இருந்த ஐந்தறிவு ஜீவனின் அரசனே.. ஆறறிவு ஜீவனின் செல்லமே.. நீ இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், என்றும் எங்கள் மனதை விட்டு பிரியாமல் இருக்கும் உனது நினைவுகள் கோடி கோடி.." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் செல்லமாக வளர்ந்த நாய் இறந்ததால், சோகம் தாங்க முடியாமல் அதற்கு பதாகை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ள குடும்பத்தின் செயல் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடை வெளியே TV பார்த்துகொண்டிருந்த தெருவோரக் குழந்தைகள்.. கார்டூன் படத்தை போட்டு காட்டிய கடை ஊழியர்!