Tamilnadu
“மாணவர்களுக்கு புதிய வகுப்பறைகள்.. 6,000 கி.மீ சாலைகள்”: 110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்புகள் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19-10-2022) அளித்த அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, 110 விதியின் கீழ், ஓர் அறிக்கையினை தங்களின் அனுமதியோடு இந்த அவையிலே அளிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திடச் செய்திடவும் நாள்தோறும் எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு - அனைத்திலும் நவீனமயம் ஆகியவற்றைக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.
சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, நவீன தமிழகத்தைக் கட்டமைப்பதில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், மொழி உரிமையில் இனமான பேராசிரியர் ஆகியோரின் வழிநின்று, சமூக மேம்பாட்டிலும் தனிமனித வளர்ச்சியிலும் இந்த நாடு ஒருசேர வளர வேண்டும், அந்த வளர்ச்சி அனைத்துத் தரப்பினரின் நலனை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறோம். இது தமிழகத்தை மேம்படுத்தும் என்பதையும் தாண்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களால் உற்றுக் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையிலான அறிவிப்புகளை மட்டுமல்லாமல், அறிவிக்காத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்பதை இந்தப் பேரவை உறுப்பினர்களும், நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.
தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில், 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் நிதி ஆண்டுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு,
• ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள்,
• எனது செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள்
• சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன்கீழ் 60 அறிவிப்புகள்
• மாவட்ட ஆய்வுப் பயணங்களின் போது வெளியிட்ட 77 அறிவிப்புகள்
• எனது உரைகளின் வழியாக 46 அறிவிப்புகள்
• நிதிநிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள்
• வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள்
• அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட 2,425 அறிவிப்புகள்.
என மொத்தம் 3,327 அறிவிப்புகள் நமது அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன என்பதை இம்மாமன்றத்துக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த அறிவிப்புகளின் மீதான தொடர் நடவடிக்கைகள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு, உரிய மேல் நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதன்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 78 விழுக்காடு அளவிலான அறிவிப்புகளுக்கு, அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் / அறிவுரைகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1,816 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. 666 அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 54 பணிகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை மக்கள்நலன் கருதி வெளியிட்டு செயல்படுத்திவரக்கூடிய நிலையில், இன்றையதினம், பள்ளிக் கல்வித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பில் இம்மாமன்றத்தில் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது.
இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கென அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்புப் பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியும் என மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி தேவை என்று கண்டறியப்பட்டு, அவற்றைப் படிப்படியாக ஏற்படுத்தித் தருவதற்கென 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அத்திட்டத்தின்படி, நடப்பாண்டில் சுமார் ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை நமது அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளார்கள். எனவே, அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நடப்பாண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, தற்போது 115 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளை நாடி வரும் மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அடுத்தபடியாக, நகர்ப்புரச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பினை வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 55 ஆயிரத்து 567 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில், 6 ஆயிரத்து 45 கி.மீ நீளமுள்ள சாலைகள், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ளன. மேலும், 2016-2017 ஆம் ஆண்டிற்கு பின்பு மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளச் சாலைகள் உள்ளன.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், பாதுகாப்பான வாகனப் போக்குவரத்திற்கும் நல்ல சாலைகள் இன்றியமையாதவை என்பதைக் கருத்திலேகொண்டு, பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கூறிய பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும்.
இதற்காக, தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டிலேயே 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 4 ஆயிரத்து 600 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். இதுதவிர, சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, 7 ஆயிரத்து 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 ஆயிரத்து 390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
அடுத்ததாக போக்குவரத்துத் துறை குறித்த அறிவிப்பு: தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமானது கோவிட் பெருந்தொற்று காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை
2020-2021 காலத்தில் நாளொன்றுக்கு 70 இலட்சமாகக் குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பாதிக்கப்பட்டது. கொரோனாவையும் கட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதியையும் கழக அரசு சீர் செய்த பிறகு, இப்போது நாளொன்றுக்கு ஒரு கோடியே 70 இலட்சம் பேராக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அரசின் மிகச் சிறந்த சேவைத் திட்டமான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதியின் மூலமாக மகளிர் நாளொன்றுக்கு சராசரியாக 44 இலட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இதற்காக 7,105 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டணமில்லாப் பேருந்துகளை அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள், சிறு வியாபாரம் செய்யக்கூடிய தாய்மார்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இதனை அரசு தனது வருமான இழப்பாகக் கருதவில்லை. மகளிர் மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டமாகவே கருதுகிறது.
பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். 500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள ஆயிரம் பழைய பேருந்துகளைப் புதுப்பித்திடவும் அறிவுறுத்தியிருக்கிறேன்.
இதுமட்டுமன்றி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு 2 ஆயிரத்து 213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கவும், உலக வங்கி உதவியோடு மேலும் ஆயிரம் பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்தகைய திட்டங்களை தீட்டுகிறோம். சொன்னதைச் செய்ய மட்டுமல்ல; சொல்லாததையும் செய்யவும் முயற்சித்து வருகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு. புதிய, புதிய திட்டங்களை நாளும் உருவாக்கி அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. துறைதோறும், துறைதோறும் தொண்டு செய்வோம் என்று கூறி அமைகிறேன்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?