Tamilnadu
தமிழகத்திற்கு வரும் 1000 புது பேருந்துகள்; என்னென்ன வசதிகள் இருக்கும்?: முதல்வர் அறிவிப்பின் விபரம் உள்ளே
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைய உள்ளது. முதல் நாளில் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் சட்டமன்ற அலுவல் கூட்டம் நடைபெற்று 19ம் தேதி வரை சட்டமன்றக் கூட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக ஒன்றிய அரசின் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். பா.ஜ.க-வை தவிர, அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்த நிலையில், ஒன்றிய அரசின் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று பேரவை கூடியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசினார்.
பின்னர் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டிற்கு புதிதாக 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 2213 டீசல் & 500 மின்சாரப் பேருந்துகள் உலக வங்கி நிதி உதவியுடன் 1000 பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் நல்ல நிலையில் உள்ள 1000 அரசு பேருந்துகள் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது முதலமைச்சர் அறிவித்த மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம், நாள் ஒன்றுக்கு 44 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் 7,155 சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 1000 சிறப்பு பேருந்துகளில் இடம்பெற்றும் புதிய சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில்,
* சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்.
* வலது மற்றும் இடது புறம் என இரு பக்கங்களிலும் இருக்கையில் இருவர் மட்டும் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும்.
* இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் திருநங்கைகளுக்கு என தனி இருக்கை வசதி உருவாக்கப்படும்.
* அதேபோல் தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட்ட பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்படும்.
* இரவு நேரங்களில் பாதுகாப்பாக பயணிகள் சென்று வர கண்காணிப்பு கேமரா மற்றும் எச்சரிக்கை மணி உள்ளிட்ட அலாரம் அமைக்கப்படும்.
* அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் மற்றும் விளக்கம் இடம்பெற்ற பதாகைகள் பொறுத்தப்பட்டிருக்கும்.
* அவசரக்காலத்திற்கு தேவைப்படும் முதலுதவி கருவிப் பெட்டி கட்டாயம் இடம்பெற்றிருக்கும் என கூறுகின்றனர்.
வட மாநிலங்களில் காலவதியான பழைய பேருந்துகளே அரசால் இயக்கப்படும் சூழலில், முத்தமிழிறிஞர் கலைஞர் கொண்டுவந்த மாணவர்களுக்கான இலவச பயணத்திட்டம் இன்றளவும் இந்தியாவின் முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது கலைஞர் ஆட்சிக்காலத்தின் போதே தானியங்கி கருவிகள் பொறுத்தப்பட்ட கதவுகளை கொண்ட பேருந்தை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது பெருமைக்குறிய விஷயமாகும்.
அதேபோல் கிராமப்புறங்களில் விவசாயிகள் விளைவிக்கும் விளைப்பொருட்களை பேருந்துகளில் ஏற்றிச் செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாட்டை தலைவர் கலைஞர் செய்திருந்தார். கலைஞர் அவர்களின் உத்தரவின் பேரிலேயே முதன்முதலாக அனைத்து அரசு பேருந்துகளிலும் திருக்குறள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!