Tamilnadu
இந்தி திணிப்பை எதிர்த்து கிளர்ந்தெழுந்த தமிழ்நாடு.. உதயநிதி ஸ்டாலின் MLA தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும், வலிமையும் பன்முகத்தன்மைதான். ஆனால், பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ஒரே நாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும் ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம் என்றும், எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். தமிழ்நாடு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசியல் தலைவர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்தியை திணிப்பது நாட்டின் கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
தென் மாநிலங்களைத் தாண்டி, மேற்குவங்கம் உட்பட நாடுமுழுவதும் இந்தித் திணிப்புக்கு எதிராக போர்க்குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்களை கைகளில் ஏந்தி, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தித் திணிப்பு எதிர்ப்பில் நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்ந்த மாநிலமாகும்.
1957-ஆம் ஆண்டில் திமுக முதன் முதலாகத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்குச் சென்றபோதே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கான உரிமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்திக் குரல் கொடுத்தது. அதில் உள்ள நியாயத்தை ஏற்றுத்தான் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜனநாயகச் சிந்தனையுடனும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும், இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும் என்கிற உறுதிமொழியை வழங்கினார். அந்த உறுதிமொழிக்கு மாறாக, ஆதிக்க இந்தியைத் திணிக்க முற்பட்டபோது அதனை எதிர்த்து 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் தீரமிகு இளைஞர்கள், தாய்மொழியாம் தமிழைக் காக்கத் தீக்குளித்தும், துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் ஏந்தியும் உயிர்த் தியாகம் செய்தனர் என்பது வரலாறு.
இந்நிலையில், இந்தி என்ற, ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இந்தி திணிப்பு மற்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று தி.மு.க. இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து, காலை 9.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!