Tamilnadu

வீட்டை விட்டு ஓடிய மாணவன்.. ஒரு வருடத்திற்கு பின் மும்பையில் மீட்ட போலிஸ்: ஆனந்தக் கண்ணீரில் பெற்றோர்!

திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். விறகு வியாபாரியான இவரது மகன் மாதேஷ். இவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாதேஷ் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் சிறுவனை தினமும் திட்டி வந்துள்ளனர். இதில் மனமுடைந்த மாதேஷ் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவுசெய்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாதேஷ் யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் மகனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். ஆனால் மாதேஷ் குறித்து எந்த தகவலும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் மாதேஷ் புகைப்படத்துடன் ஆதார் அட்டை வீட்டிற்கு வந்துள்ளது.

இதைப்பார்த்துப் பெற்றோர்கள் ஆச்சரியத்துடன் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார் மாதேஷின் ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது அது மும்பையிலிருந்து வந்தது என தெரியவந்தது.

பின்னர் திருவாரூர் போலிஸார் மாதேஷின் தந்தையுடன் மும்பை சென்று மாதேஷை மீட்டுள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை போலிஸார் மும்பையில் கண்டுபிடித்து மீட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நரபலி தொடர்ந்து அடுத்த பூஜை? : மந்திரவாதத்தில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சிறுவன் - பெண் சாமியார் கைது!