Tamilnadu

”தி.மு.க. பழுத்த மரம் அல்ல - கற்கோட்டை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழுவில் 2வது முறையாக ஒருமனதாக மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து சிறப்புரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,"தலைவர் கலைஞர் அவர்கள்தான் சொல்வார்கள் - கருணாநிதி வாழ்க என்றாலும், கருணாநிதி ஒழிக என்றாலும் கருணாநிதி என்று சொல்வது எனக்குப் பெருமை தான் என்று சொல்வார்கள். அந்த மாதிரி தி.மு.க. பழுத்த மரமாக இருப்பதால் தானே கல்லெறிகிறார்கள். தி.மு.க. பழுத்த மரம் அல்ல - கற்கோட்டை! கோட்டை மீது கல் வீசினால் கோட்டை பலம் பெறுமே தவிர பலவீனம் அடையாது.

15-ஆவது தேர்தல் என்பது பல மடங்கு பலத்தை நமக்குக் கொடுத்துள்ளது. பல்வேறு பொறுப்புகளுக்கு தகுதி படைத்த பல லட்சம் பேர் இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சியை இந்தத் தேர்தல் எனக்கு அளித்துள்ளது. இந்த அரங்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - புதிய நிர்வாகிகள் பலர் வந்துள்ளீர்கள். பழைய நிர்வாகிகள் பலரும் இருப்பீர்கள்.

காலம் உங்களுக்குச் சில கடமைகளைச் செய்வதற்குக் கொடையாக இந்தப் பொறுப்புகளை வழங்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் மட்டுமே தகுதி படைத்தவர்கள் - வேறு யாரும் இல்லாததால் இந்தப் பொறுப்புக்கு நீங்கள் வந்துவிடவில்லை. உங்களைப் போல லட்சக்கணக்கானவர்கள் இந்தத் தமிழினத்துக்கு உழைக்க - சுயமரியாதையைக் காக்க காத்திருக்கிறார்கள்.

நீங்கள் பொறுப்புக்கு வந்திருப்பதால், அவர்கள் உங்கள் தோளோடு தோள் நின்று களப்பணியாற்ற - இனமானம் காக்க துணை நிற்கப் போகிறார்கள். எனவே, உங்கள் பொறுப்பும் கடமையும் மிகமிகப் பெரியது. அதனை மறந்துவிடாதீர்கள்!

எந்தப் பொறுப்பாக இருந்தாலும் அதனை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் பொறுப்புகள் தொடரும். கடந்த பத்தாண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருந்தபோது - பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் சிலர் தொடரட்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் முடிவெடுத்தோம். அப்போது கூட நம்முடைய முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள் - என்னிடம் - 'நீங்க ரொம்ப Soft ஆயிட்டீங்க தளபதி' என்று சொன்னார். இரக்கத்தால் கூட சிலருக்குப் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டு இருக்கலாம்

இதன் காரணமாகப் புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை என்பதும் உண்மைதான். அப்படி வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வருந்தவேண்டாம். வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படவுமில்லை, நீங்கள் மறக்கப்படவுமில்லை என்பதை தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். பொறுப்பில் அவர்கள் உட்கார வைக்கப்படவில்லை என்றாலும் - கழகத்தை வலிமைப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

புதிய நிர்வாகிகள் - பொறுப்புக்கு வர இயலாத அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். அனைவர் ஆலோசனையையும் பெறுங்கள். சிலர் மற்ற நிர்வாகிகளோடு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என்று நான் கேள்விப்படுகிறேன். இதை விட கட்சித் துரோகம் எதுவும் இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: "பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழுந்தது".. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?