Tamilnadu
கிராமங்களில் 60% குடிநீர் குழாய் இணைப்பு.. பா.ஜ.க ஆளும் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழக அரசு முதலிடம்!
உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் 60% குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு, கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி வருவதற்கு தமிழ்நாடு அரசு முதல் பரிசு பெற்றுள்ளது.
இதற்கான விருதினை இன்று (02.10.2022) புது தில்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய ஆலோசனைகளின்படி தமிழ்நாட்டில் உயிர் நீர் இயக்கம் (Jal Jeevan Mission) சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 இலட்சம் வீடுகளில் இதுவரை 69.14 இலட்சம் வீடுகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர், சமீபத்தில் நடைபெற்ற உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) ஆய்வுக்கூட்டத்தில் உள்ளூர் நீர் ஆதாரம் நிலையாக உள்ள ஊரகப் பகுதிகளில் ஒற்றை கிராமத் திட்டங்களை செயல்படுத்தவும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் நிலைத்தன்மை இல்லாத இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவும் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.
அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில உயிர் நீர் இயக்கத்தின் (Jal Jeevan Mission) சார்பில் மீதமுள்ள 55.79 இலட்சம் வீடுகளுக்கு பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஒற்றைக் கிராமத் திட்டங்கள் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் ரூ. 18,000 கோடி அளவிற்கு 42 புதிய குடிநீர் திட்டங்களும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன.
உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதால், சில பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தினை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு அரசின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து பின்வரும் கோரிக்கைகளை தெரிவித்து நிதி ஓதுக்கீடு கோரியுள்ளார்கள்:
கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நீடித்த நிலைத் தன்மையை உறுதி செய்ய, காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ள இடங்களின் அருகில் தடுப்பணைகள் கட்டுவதற்கு உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தில், ரூ. 2,400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களை சிறப்பாக பராமரித்து தானியங்கு முறையில் (Automation) இயந்திரங்களை நிறுவி விரைவாக குடிநீர் வழங்குவதற்கு, ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, அதனை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்புவதற்கு திட்டங்கள் செயல்படுத்த, ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்