Tamilnadu
மின் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: OPS மகனின் தோட்ட மேலாளர்கள் கைது - வனத்துறையினர் அதிரடி
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில்அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வயது சிறுத்தை ஒன்று வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர் மின்வேலியில் சிக்கியிருந்த சிறுத்தையை காப்பாற்ற முயன்றபோது அது தானாகவே மின்வேலியிலிருந்து தப்பி ஓடியதாகவும், தப்பிச் செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கிவிட்டுச் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் அதனை மீட்டு உடற்கூறாய்வு செய்து, பின்னர் அதனை புதைத்தனர்.
இருப்பினும் அதன் இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை உயிரிழந்த தோட்டம் ஓ.பி.எஸ் மகனும், அ.தி.மு.க எம்.பி-யுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும் அங்கு வனவிலங்குகள் வருவதை தடுக்க அந்த இடத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்திருத்தத்தில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் கிடை அமைத்து ஆடு மேய்த்து வந்த, இராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தொடர் விசாரணையில் ஈடுபட்ட வனத்துறையினர், தற்போது அதிமுக எம்.பி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் மேலாளராக பணிபுரிந்த பெரியகுளத்தைச் சேர்ந்த தங்கவேல் (42) மற்றும் நாகலாபுரத்தைச் சேர்ந்த ராஜவேல் (28) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) குருசாமி தபாலா கூறுகையில், " சிறுத்தை இறப்பு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. முடிந்த பிறகுதான் இது தொடர்பாக தகவல்களை தெரிவிக்க முடியும். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள விவசாயி அலெக்ஸ்பாண்டியன், ஆடுகளை வனவிலங்குகள் தாக்காமல் இருக்க கன்னி வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் அவரைக் கைதுசெய்துள்ளோம்" என்றார்.
மேலும் உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் கூறுகையில், "என்னை தாக்கிவிட்டு தப்பியது பெண் சிறுத்தை' ஆனால் வேலியில் சிக்கி உயிரிழந்தது ஆண் சிறுத்தை. தேனி எம்.பி-க்குச் சொந்தமான இடத்தில்தான் அலெக்ஸ் பாண்டியன் கிடை போட்டுள்ளார். செப்டம்பர் 18-ம் தேதி அவருடைய கிடையிலிருந்து 2 ஆடுகளைக் காணவில்லை.
வனவிலங்குதான் ஆடுகளை அடித்துச் சென்றிருக்கக்கூடும் என அவர் வேலியில் கன்னி அமைத்ததாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் அவரைக் கைதுசெய்துள்ளோம். அடுத்தகட்டமாக தோட்டத்தின் மேலாளரிடம் விசாரித்து வருகிறோம். அவர்கள்மீது உரிய ஆதாரங்களுடன் இடத்தின் உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!