Tamilnadu
“தனியார் மயமான விமான நிலைய பாதுகாப்பு” - செலவை காரணம் காட்டி CISF படையினரை குறைத்த மோடி அரசு !
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.
குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குச் சேவை செய்யப்போவதாக பா.ஜ.க அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியிலிருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் 30 சதவீதம் குறைக்கப்பட்டு அந்த இடங்களுக்கு தனியாா் பாதுகாப்பு படை வீரா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பு, ஏற்கனவே அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் போலிஸார் வசமிருந்து வந்தது. ஆனால் கடந்த 1999 ஆம் ஆண்டில், டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள், காட்மாண்டுக்கு கடத்திச் சென்ற சம்பவம் நடந்தது.
அதன் பின்பு நாடு முழுவதும் உள்ள, குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, அப்போதைய ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி விமான நிலையங்களில் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை எனப்படும், CISF வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை விமான நிலைய பாதுகாப்பும் கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் 650 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தொடங்கியது. அதன்பின்பு படிப்படியாக உயர்ந்து தற்போது 1,500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போதைய ஒன்றிய அரசு விமான நிலையங்களின் பாதுகாப்பை, மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த மிக முக்கியமான பகுதிகளில் மட்டும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், மற்ற பகுதிகளில் தனியார் பாதுகாப்பு படையையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அவ்வாறு தனியாா் பாதுகாப்பு படை வீரர்கள் தோ்வு செய்யப்படும்போது, முன்னாள் ராணுவத்தினரை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள 1,500 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்களில் 30 சதவீதம், 450 பேர் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த காலி இடங்களுக்கு, தனியாா் பாதுகாப்பு படையினா் சென்னை விமானநிலையத்தில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனா்.
அதற்கான உத்தரவை, BCAS எனப்படும், பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி தலைமை அலுவலகம் பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை விமானநிலையத்தில் முதல்கட்டமாக 50 தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விமான நிலைய இயக்குனர் சரத்குமார் நேற்று பணி சான்றிதழ் வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு இரண்டு வார காலம், சென்னை விமானவிமான நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின்பு விமான நிலைய பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் தனியாா் பாதுகாப்பு படை வீரா்கள், தொடர்ச்சியாக பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நடக்கும் பாதுகாப்பு சோதனை, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை பகுதி, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்கு பார்சல் பாதுகாப்பு பகுதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், வழக்கம் போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஆனால் பயணிகள் உள்ளே செல்லும்போது டிக்கெட் பரிசோதித்து அனுப்புவது, முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு, கார் பார்க்கிங் பகுதியில் பாதுகாப்பு போன்ற பணிகளில் புதிதாக தோ்வு செய்யப்படும் தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் விமான நிலைய பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகை கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியிலிருந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை குறைப்பது, சரியானது அல்ல என்றும் கூறப்படுகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?