Tamilnadu

6 பேரை திருமணம் செய்த மதுரை பெண்.. நகை, பணத்தை திருடி சென்றது அம்பலம்.. சிக்கியது எப்படி ?

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 35). நீண்ட நாட்களாக திருமணத்திற்காக பெண் தேடி அழைந்த இவருக்கு, தரகர் மூலமாக மதுரையை சேர்ந்த சந்தியா (வயது 26) என்ற இளம்பெண் அறிமுகமானார். கஷ்டப்பட்ட குடும்பம் என்று கூறியதால் எந்த ஒரு வரதட்சணையும் வாங்காமல் திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளார் தனபால்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கும் சந்தியாவுக்கு ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் சந்தியாவின் அக்கா மற்றும் மாமா என்று இரண்டு பேரும், தரகரும் பங்கேற்றனர். பின்னர் திருமணம் நடந்து முடிந்த பிறகு தரகர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தரகர் மாயமானார்.

திருமணம் முடிந்து மறுநாள் காலை தனபால் எழுந்து பார்க்கையில் சந்தியா காணாமல் போயுள்ளார். சந்தியாவை அனைத்து பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது மொபைல் எண்ணிற்கும், அவரது குடும்பத்தாரின் மொபைல் எண்ணிற்கும் தொடர்பு கொண்டார். அப்போது அவர்களது எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சந்தேகம்கொண்ட தனபால் தனது பீரோவை திறந்து பார்க்கையில் அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் உடைகள் அனைத்தும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனபால் தனது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தனபால் தனது உறவினர்கள் மூலம் வேறொரு திட்டமும் தீட்ட நினைத்துள்ளார். அதன்படி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருக்கு திருமணம் செய்ய பெண் தேடுவது போல் மதுரை தரகருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அவரும் சந்தியா புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தங்களுக்கு பெண் பிடித்திருக்கிறது என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி மாப்பிள்ளையை நேரில் பார்க்க சந்தியாவும் சந்தியாவின் குடும்பத்தினரும் திருச்செங்கோட்டிற்கு வந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு காத்திருந்த முன்னாள் கணவர் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் சந்தியா மற்றும் அவருடன் வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சந்தியா மற்றும் அவருடன் இருப்பவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்றும், திருமணம் ஆகாத ஆண்களை குறிவைத்து, சந்தியாவை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அன்று இரவே அவர்களிடம் இருந்து பணம் நகைகளை கொள்ளையடித்து சென்று வந்ததும் தெரியவந்தது.

மேலும் சந்தியா ஏற்கனவே தனபாலுக்கு முன்பாக 5 பேரை திருமணம் செய்ததும், தனபாலை 6-வதாக திருமணம் செய்ததும், தற்போது இவர் 7-வது திருமணத்திற்கு தயாராகி இருந்ததும் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 75 வயது மூதாட்டியை உயிருடன் எரித்த மகன்.. மது வாங்க பணம் தராததால் ஆத்திரம்.. கேரளாவில் அதிர்ச்சி !