Tamilnadu

அரசு பள்ளி மாணவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள புதிய உத்தரவு என்ன?

தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு துறைகள் வளர்ச்சி கண்டு வருகிறது. அதிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று, சிறப்பு கவனிப்பே நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலை உணவு திட்டம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அதிரடியான திட்டங்களையும் அறிவித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற உத்தரவு 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேலைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலை செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு பள்ளியும் இந்த செயல்பாடுகளுக்கு என பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இரயில் மோதி உயிரிழந்த பாட்டிக்கு இறுதி சடங்கு.. படையல் படைத்தபோது உயிருடன் வந்ததால் பரபரப்பு..