Tamilnadu

5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் கேரளாவில் இளைஞர் தற்கொலை: நடந்தது என்ன?

திருப்பூர் அனுப்பர்பாளையம் சொர்ணபுரி அவென்யூ மகாலட்சுமி கார்டன் 2வது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு அஜய் பிரணவ் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் , சிவக்குமார் பெருமாநல்லூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கணக்காளராகக் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட கான்ட்ராக்டர் ராகேஷ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் இணைந்து நிறுவன உரிமையாளர் ராஜசேகர் 100 வீடுகள் கட்டி விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக ராகேஷ் தனது பங்களிப்பாக ரூ. 38 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் சிவகுமாரின் மனைவி கவிதா பெயரில் நிலம் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வீடு கட்டும் இடத்தை ராகேஷ் சென்று பார்த்த போது அந்த இடம் பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனால் தனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். இரு தரப்பிலும் பேசப்பட்டு ரூ. 38 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர்.

ஆனால் நிலம் விற்பனையாகாதது மற்றும் பணம் இல்லை என தொடர்ந்து பணத்தை தராமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சிவகுமார் வேலை செய்யும் இடத்தில் பணியாற்றி வந்த பணியாளர்களைக் கடந்த ஜூலை மாதம் ராகேஷ் மிரட்டி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய போலிஸார்

இருப்பினும், ரூ.38 லட்சம் ராகேஷுக்கு கொடுத்து பிரச்சனை முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 100 வீடுகள் கட்டப்பட்டு இருந்தால் தனக்கு 5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் ஆனால் அது கிடைக்காததால் தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி ராகேஷ் சிவக்குமாரைத் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா வீட்டில் இருந்த போது முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்களைக் கட்டிப்போட்டு வீடுமுழுவம் பணம் உள்ளதா என தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை.

அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் அஜய் ப்ரணவை அவர்கள் தூக்கிக் கொண்டு ரூ. 5 கோடி கொடுத்தால்தான் மகனைக் கொடுக்க முடியும் என கூறியுள்ளனர். அப்போது அப்போது அஜய் பிரணவ் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போது ஒருவரின் முகமூடி விலகியுள்ளது. அதில் மகனை கடத்தி மிரட்டியது ராகேஷ் என்பது தெரியவந்தது ‌.

இதையடுத்து பெற்றோர்கள் ராகேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் கொல்லம் தனியார் விடுதியில் மாணவனைக் கடத்திச் சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் அங்கு சென்ற போலிஸார் சிறுவனைப் பத்திரமாக மீட்டுள்ளனர். விசாரணையில் ராகேஷ் அடையாளம் தெரிந்து விட்ட நிலையில் போலிஸார் தன்னை பிடித்து விட கூடும் என்ற பயத்தில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு நபர் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் 5 கோடி ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்டு பின்னர் கடத்திய நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிறார்களுக்கு தின்பண்டம் வழங்க மறுப்பு :5 பேர் மீது வழக்கு, 2 பேர் கைது - அரசு தரப்பில் வெளியான விளக்கம்!