Tamilnadu
“முரசொலித்த முப்பெரும் விழா.. இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும்” : உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!
மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் இரட்டை ஆட்சி முறைக்கு முடிவு கட்டிட, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிட, நாடு முழுவதுற்கும் ‘திராவிட மாடல்’ தேவைப்படுகிறது. அதற்கான முழக்கமாகத்தான் ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே’ !.” எனக் குறிப்பிட்டு தி.மு.க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் உளமார்ந்த நன்றி மடல்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் இருந்திருந்தால், எப்படி ஒரு முப்பெரும் விழா நடத்தப்பட்டு, அதில் உடன்பிறப்புகளாகிய நாம் அனைவரும் திரண்டு வந்து ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் கலந்துகொண்டிருப்போமோ, அதற்கு எள்ளளவும் குறையாத வகையில், விருதுநகரில் செப்டம்பர் 15-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கடல் அலையாய், அணை விளிம்புவரை பெருகிய வெள்ளமாய்த் திரண்டு வந்து கலந்து கொண்டு, எழிலும் ஏற்றமும் கூட்டியமைக்காக, உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் கரங்களையும் பற்றிக் கொண்டு, இந்தக் கடிதத்தின் வாயிலாக என் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விருதுநகர் செல்லும் சாலைகளெங்கும் விரிகடல் வேகமாகப் புகுந்ததோ என்று வியக்கும் அளவுக்கு, திரும்பும் திசையெல்லாம் மக்கள் மாக்கடல். முப்பெரும் விழா 15-ஆம் தேதிதான் என்றாலும், முதல் நாள் இரவு முதலே முந்திக் கொண்டு திரண்டு வந்த உடன்பிறப்புகள், தமிழ்நாட்டை பகுத்தறிவு-சுயமரியாதை-சமூகநீதி ஆகிய இலட்சிய உளிகள் கொண்டு எழுச்சி நிறைந்திடச் செதுக்கிய நமது முப்பெரும் தலைவர்களான பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோரை மகத்தான மலையில் செதுக்கி வைத்தது போன்ற மனங்கவரும் தோற்றத்தைக் கொண்ட முகப்பின் முன்நின்று ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டு சிந்தை மகிழ்ந்தனர். விடியல் அரசின் வெற்றிச் செய்தியை இடி முழக்கமென உரக்கச் சொல்லும் விழாவிற்காக விடிய விடியத் தொண்டர்கள் அணி அணியாய் வந்தபடியே இருந்தனர்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்த செப்டம்பர் 15 அன்று காலையில், மதுரையில் உள்ள ஆதிமூலம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ சமுதாயத்திற்கான காலைச் சிற்றுண்டி எனும் செறிவான திட்டத்தைத் தொடங்கி வைத்து, நம்முடைய அரசு இந்தியத் துணைக் கண்டத்திற்கே முன்மாதிரியான முற்போக்கு அரசு என்பதை மீண்டும் மெய்ப்பித்திடும் வாய்ப்பினைப் பெற்று, மனநிறைவுடன் விருதுநகர் நோக்கிப் புறப்பட்டேன்.
வழியெங்கும் கழகத்தின் இருவண்ணக் கொடிகள் காற்றில் அழகுற அசைந்து, “வா உடன்பிறப்பே” என்று வாஞ்சையுடன் வரவேற்பினை வாரி வழங்கின. காற்றில் அசையும் வெறும் கொடியா அது? கருப்பும் சிவப்பும் கலந்த ஒவ்வொரு உடன்பிறப்பின் உயிர்க் குருதியோட்டம் அல்லவா! தலைவர் என்ற பெயரில் உங்களை வழிநடத்தும் பொறுப்பைச் சுமந்துள்ள மூத்த உடன்பிறப்பாம் உங்களில் ஒருவனான என்னுடைய குருதியில் இரண்டறக் கலந்துள்ள கொள்கை உணர்வினால் அந்தக் கொடிகள் மென்மையாக ஆடி அசைவதை கண் இமைக்காமல் பார்த்தபடியே பயணித்தேன்.
“எங்களைப் பார்” என்பதுபோல இருபுறமும் பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் திரண்டிருந்தனர். அன்புக் கரம் நீட்டி, ஆனந்தக் குரல் எழுப்பினர். இன்முகத்துடன் - புன்சிரிப்புடன் அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் கடலில் நீந்தியபடி விழா மேடைக்கு நானும் கழக முன்னோடிகளும் வந்து சேர்ந்தோம். விருதுநகர் மாவட்டத்தின் ‘மருதிருவர்’ என நான் அடிக்கடி சொல்கின்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் - மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் செயல் புயல்களாகப் பணியாற்றி, விழாவைச் சிறப்பாகவும் சீர்பெருக்கியும் வெற்றிகரமாகவும் நடத்திக் காட்டினர்.
மேடையில் அமர்ந்திருந்தபோது, எதிரே கண்ணுக்குத் தெரிந்த வரை உடன்பிறப்புகளின் இனிய முகங்கள்தான். பந்தலைக் கடந்து, நெடுஞ்சாலை வரை அடர்த்தியாக நிறைந்திருந்தனர். வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. அதனால் நமது கழகப் பொருளாளர் - விழாவில் கலைஞர் விருது பெற்ற அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் நிகழ்ச்சி தொடங்கிய பிறகும் மேடைக்கு வந்து சேர இயலாமல் மக்கள் கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருந்தார்.
முப்பெரும் விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது, முரசொலியில் முத்தமிழறிஞர் எழுதும் உடன்பிறப்பு கடிதங்கள்தான். 4041 கடிதங்களை 21,510 பக்கங்களில் 54 தொகுதிகளாக சீதை பதிப்பகம் கௌரா ராஜசேகர் தொகுத்திட, அந்த வரலாற்று ஆவணத்தை விழா மேடையில் வெளியிட்டு பெருமை கொண்டேன்.
நம் உயிர்நிகர் தலைவரின் எழுத்தோவியங்களைப் பத்திரப்படுத்தி - பாதுகாப்பாக வைத்திருந்து – சரிபார்த்து - அச்சுக்கு அனுப்பும்வரை தன் கடமையைச் செய்து, அந்தக் கடமையை நிறைவு செய்தபிறகு இந்த உலகை விட்டு விடைபெற்ற சகோதரர் சண்முகநாதன் அவர்களின் நினைவில் சில நொடிகள் மூழ்கிவிட்டேன். கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய வரலாற்று ஆவணம் தலைவர் கலைஞரின் கடிதத் தொகுப்புகள்.
ஆலமரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூச்செடி மலர்வது போல, உயிர்நிகர் தலைவரின் கடித ஆவண வெளியீட்டினைத் தொடர்ந்து, ‘திராவிட மாடல்’ என்பதற்கான இலக்கணம் குறித்து எளிய முறையில் நான் ஆற்றிய உரைகளில் இருந்து சிறிய சிறிய அளவிலான கருத்துகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட சிறிய நூல். கழகத்தின் பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் வெளியிட, கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. பெற்றுக் கொண்டார். கழகத்தின் இளையதலைமுறை எளிதில் படித்தறியக் கூடிய வகையில் டைரி போன்ற வடிவமைப்பில் திராவிட மாடல் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் பிறந்தநாள் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாடுகிற நாளில் கழகத்தின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட முன்னோடிகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பது முத்தமிழறிஞர் கலைஞர் ஏற்படுத்திய எழுச்சியான வழிமுறை.
அதனைப் பின்பற்றி, பெரியார் விருது திருமதி சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கும், அண்ணா விருது கோவை திரு.இரா.மோகன் அவர்களுக்கும், கலைஞர் விருது டி.ஆர்.பாலு எம்.பி. அவர்களுக்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி திரு.சி.பி.திருநாவுக்கரசு அவர்களுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் திரு.சீனிவாசன் அவர்களுக்கும் கேடயம் - பொற்கிழியுடன் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கழகத்தைக் கட்டிக்காப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய நிர்வாகிகள் 15 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழுடன் பொற்கிழியும் அளிக்கப்பட்டது.
கழகத்திற்காக உழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம், கைவிட மாட்டோம் என்பதை உலகத்தார்க்கு உணர்த்துவதன் அடையாளமாகத்தான் இந்த விருது நிகழ்வுகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெறுகின்றன. விருது பெற்றவர்களின் சார்பில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு ஆற்றிய உரையில் எத்தனை நெகிழ்ச்சியான நினைவுகள்! எவ்வளவு உணர்ச்சிமிக்க உரை விளக்கம்! விருது பெற்ற ஒவ்வொருவரும் கழகத்திற்காகச் செய்த தியாகங்கள், சிறைக்கு அஞ்சாத தன்மை, உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்புக் கட்டளையை சிரமேல் தாங்கி சிறப்புடன் நிறைவேற்றும் ஆற்றல், குடும்பத்தின் சுகங்களை மறந்து கழகமே பெரும்குடும்பம் என்ற வாழ்க்கை, அதற்கான களப் பணிகள் என நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாகவே அந்த ஏற்புரை அமைந்திருந்தது. 65 ஆண்டுகாலம் தலைவர் கலைஞரின் தொண்டனாக, டெல்லி வரை சென்றாலும் அவர் இடும் கட்டளையை இன்முகத்துடன் நிறைவேற்றும் கடமையுடையவராக இருந்ததை டி.ஆர்.பாலு தன் பேச்சில் உணர்ச்சி பொங்கச் சுட்டிக்காட்டினார்.
தலைமையுரை ஆற்றிய கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள், நம்முடைய அரசு நாள்தோறும் செய்து வரும் மகத்தான நற்பணிகளை மிக அழகான முறையிலே எடுத்துக்காட்டி, அது இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்பதையும் குறிப்பிட்டார். தனிப்பட்டவர்கள் மீது எந்தப் பகையுமின்றி, அதே நேரத்தில் கொள்கை உறுதியில் கொஞ்சமும் குறைவின்றி, உங்களில் ஒருவனான எனது தலைமையிலான நமது அரசு செயலாற்றும் விதத்தை அவர் அழகாக எடுத்துரைத்தார்.
உங்களின் குரலாக விழாவில் சிறப்புரை - நிறைவுரை ஆற்ற வேண்டிய கடமை எனக்கு அமைந்தது. ஆம்! உங்களின் ஒருமித்த குரலாகத்தான் நான் ஒலித்தேன். ஒவ்வொரு உடன்பிறப்பின் மனதிலும் உள்ளதை எடுத்துச் சொல்லும் மூத்த உடன்பிறப்பாகத்தான் என் கருத்துகளை எடுத்து வைத்தேன். தொண்டர்கள் இல்லாமல் இந்த இயக்கம் இல்லை; இத்தனை பெரிய வெற்றி இல்லை.
ஒரு இராணுவ வீரருக்கு நாட்டையும் காக்க வேண்டும், தன் வீட்டையும் காக்க வேண்டும் என்கிற இரட்டைக் கடமை என்றைக்கும் இருப்பது போல ஆட்சியையும் சிறப்பாக நடத்தி, கட்சியையும் சிறப்பாக வழிநடத்த வேண்டிய இரட்டைப் பொறுப்பு கொண்டிருக்கும் உங்களில் ஒருவனான நான், தமிழ்நாட்டு மக்களின் நலனைப் போலவே கழக உடன்பிறப்புகளின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன். அதைத்தான் மேடையில் எடுத்துரைத்தேன். தலைமைக் கழக - மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு அதனை எடுத்துரைத்தேன்.
தொண்டர்களின் நலன் போற்றிக் காத்து, இயக்கத்தின் வலிமையை என்றும் பெருக்கி நாம் சந்திக்க வேண்டிய களங்கள் நிறைய இருக்கின்றன. மாநில உரிமைகளைக் காப்பதற்கும் நம் மக்களுக்கான திட்டங்களைத் தடையின்றி நடத்துவதற்கும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒன்றிய அரசு அமைந்தாக வேண்டும். அதற்கான களமாக நாடாளுமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது. அந்தக் களத்திற்கு நாம் இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும்.
விருதுநகர் முப்பெரும் விழா அதற்கான பாசறைப் பயிற்சிக் களமாக அமைந்திருக்கிறது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் இரட்டை ஆட்சி முறைக்கு முடிவு கட்டிட, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டிட, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பாற்றிட, நாடு முழுவதுற்கும் ‘திராவிட மாடல்’ தேவைப்படுகிறது. அதற்கான முழக்கமாகத்தான் ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே’ என்று அந்த மேடையில் உங்களின் குரலாக நான் முழங்கினேன்.
முப்பெரும் விழாவில் உங்கள் முகம் கண்டு மனம் மகிழ்ந்ததுடன், உடன்பிறப்புகளாம் உங்களின் மீதுள்ள முழு நம்பிக்கையினால் இந்த முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறேன். தொடர் வெற்றிகளைக் காண்பதற்கு, விருதுநகர் ஒரு நல்ல தொடக்கம். அது வெற்றிக் களத்திற்கான முரசொலி; களம் காண்போம்; வெற்றிகளைக் குவிப்போம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!