Tamilnadu

பட்டியலின சிறார்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடை உரிமையாளர்.. கைது செய்து அதிரடி நடவடிக்கை !

தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சிலர் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்குவதற்காக சென்றனர். அப்போது அந்த கடை உரிமையாளர் "உங்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது.. ஊர் கட்டுப்பாடு வந்துள்ளது.. உங்கள் தெரு பிள்ளைகள் யாருக்கும் வழங்க முடியாது.." என்று கறாராக கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இன்று இணையத்தில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் கோட்டாச்சியர் சுப்புலட்சுமி முன்னிலையில் வட்டாச்சியர் பாபு, சம்பந்தப்பட்ட கடையை பூட்டி சீல் வைத்தார். அதோடு பாஞ்சாகுளம் கிராமத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு உரிமையாளர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த கடை உரிமையாளர்களான மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாயம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இருவேறு சமூகத்தினரிடையே அமைதியை ஏற்படுத்தும் விதமாக அடுத்தடுத்து கூட்டங்களை ஏற்படுத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தந்தை பெரியார் ‘உலக தலைவர்” என்பதை உலகம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!