Tamilnadu

பள்ளிகளில் காலை சிற்றுண்டி.. இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ அரசு: கி.வீரமணி வரவேற்பு!

5 ஆம் வகுப்புவரை காலை உணவு என்பது ஒரு சமூகப் புரட்சித் திட்டம் என்றும், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசு - இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அறிஞர் அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நமது முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு சிறப்பான சாதனைத் திருவிழாவாக ஆக்கிக் கொண்டாட வைத்துள்ளார்!

மனுதர்மத்துக்கு எதிரான ‘‘திராவிட மாடல்’’ அரசு ‘அனைவருக்கும் கல்வியைக் கொடுக்காதே’ என்று கூறும் மனுதர்மம் கோலோச்சிய நாட்டில், நூற்றாண்டு கண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியும், காமராசர் ஆட்சியும்தான் ஒரு மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தி, கல்வி நீரோடையிலிருந்து பார்ப்பன முதலைகளை வெளியேற்றி, குலதர்மக் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்து, தந்தை பெரியார் விரும்பியவாறு கல்வி நீரோடை நாடெலாம் வீடலொம் தமிழ்நாட்டில் பாயத் தொடங்கியது.

நீதிக்கட்சி முதல் ‘திராவிட மாடல்’ ஆட்சிவரை நீதிக்கட்சி ஆட்சியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, சென்னை மாநகரத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இலவசப் பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் அன்றைய மேயர் வள்ளல் தியாகராயர். ஆனால், அப்போதிருந்த ஆட்சி அதிகாரங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவைகளானபடியால் நீதிக்கட்சி ஆட்சியில் அத்திட்டம் தொடர முடியாத சூழல் - நிதி நெருக்கடியால் ஏற்பட்டது.

பிறகு கல்வி வள்ளல் காமராசர் ஆட்சி பகல் உணவுத் திட்டம் - மக்கள் நிதி உதவியோடு தொடங்கி, பிறகு அரசுத் திட்டமாகி, நல்ல பலன் தந்தது!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அது ‘சத்துணவு திட்டமாக’ வளர்ந்தது; மீண்டும் கலைஞர் ஆட்சியில் வாரம் 2 முட்டை அல்லது வாழைப்பழங்கள் கூடுதலாகச் சேர்த்த அசல் சத்துணவாகவே பரிமளித்தது!

உலகம் இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை - வரலாற்றைப் பாராட்டியது. அவற்றைத் தாண்டியது இன்றைய கல்விப் புரட்சி!அரசு பள்ளிகளில் காலையில் ‘இளங்குருத்துகள்’ தொடக்கப்பள்ளிகளில் (ஒன்றாம் வகுப்புமுதல் அய்ந்தாம் வகுப்பு வரை) சிற்றுண்டி சாப்பிட வசதியில்லாததாலோ அல்லது வாய்பில்லாததாலோ அல்லது வேறு காரணங்களாலோ பசியோடு வகுப்பறைகளுக்குச் சென்று, பாடங்களில் கவனம் செலுத்த இயலாத சூழல் - கருகிய மொட்டுகளாகிவிடும் நிலை கண்கூடு.

தற்போது ஏற்பட்டு, திக்கெட்டும் தமது சாதனைகளால் சரித்திரம் படைக்கும் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாண்புமிகு நமது முதலமைச்சர், இதனைச் சரியாக உணர்ந்து ஆரம்பப் பள்ளிகளில் - நல்ல தூய்மையும், பான்மையும் கூடிய காலைச் சிற்றுண்டியையும் அக்குழந்தைகளுக்கு அளிக்கும் திட்டத்தை நேற்று (15.9.2022) தொடங்கி வைத்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மணிமகுடத்தில் மேலும் ஓர் ஒளிமுத்தைப் பதித்துள்ளார்!

மனிதநேயப் பணி!

ஒரு மாணவருக்கு 12.75 ரூபாய் கூடுதல் செலவு என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதை நமது முதலமைச்சர் ‘செலவு’ அல்ல; அது எதிர்காலத்திற்கான ‘சமூக முதலீடு’ (சோஷியல் இன்ஸ்வெஸ்ட்மெண்ட்) என்று பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகள் சில வீடுகளில் சிற்றுண்டி தயாராக இருக்கும்போது, காலதாமதம் என்று சாப்பிடாமல் பள்ளிக்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் செல்லும் நிலையில், அவர்களின் வயிற்றுப் பசி தீர்த்து, கல்வி அறிவுப் பசி போக்கும் அரும்பணி - மனிதநேயப் பணி இதன்மூலம் தொண்டறமாக மலர்ந்துள்ளது!

இது ஒரு சமூகப் புரட்சி

இது ஒரு சமூகப் புரட்சி - அமைதியான கல்விப் புரட்சி.

மாநில கருவூலத்தில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும் நிலையில், இதனைத் தலையாய கடமையாக எடுத்துக்கொண்டு இளம்நாற்றுகள் மீது கருணை மழையை பெய்ய வைத்துள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரைப் பாராட்ட வார்த்தையே இல்லை! கடன் சுமை ஒருபுறம்; காலியான கருவூலம் மறுபக்கம். எல்லாவற்றையும் தாண்டி முன்னுரிமை - இளம்பிள்ளைகள் கல்விக் கண்ணொளி பரவ இத்தகைய ஏற்பாடு தேவையானதே!

ஒரு தனி நிதியத்தை ஏற்படுத்தலாம்!

அரசு இதற்கென ஒரு தனித் துறையைக்கூட உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள பல செல்வந்தர்கள், தொழிலதிபர்களிடம் நன்கொடைகளைப் பெறலாம்! பல அறக்கட்டளைகளிடமிருந்தும் நன்கொடை பெறலாம் - ஒரு தனி நிதியத்தையே ஏற்படுத்தி, நிதிப் பற்றாக்குறையை - இச்செயல்களால் ஈடுகட்ட அது உதவக் கூடும்!

கோவில் நிதிகள் இந்தக் கல்விப் பணிக்குப் பயன்பட்டால், அதை யாரும் குற்றம் சுமத்த முடியாது -

‘‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’

என்றார் கவிஞர் பாரதியார்.

அதைப் புரிந்து, கோவில் நிதி மற்றும் தாமாக முன்வந்து இதற்கென வழங்கும் நன்கொடைகளுக்கு சிறப்பு நூறு சதவிகித வரி விலக்குகளை ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெறலாம்.

இத்திட்டம் சிறப்புடன் நடைபெற, பெற்றோர்கள் - ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழுவை ஆங்காங்கே அமைத்தல் அவசியம்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டம் - முதலமைச்சருக்கு நன்றி!

அக்குழு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களைக் கொண்டு செயல்பட்டால், இத்திட்டத்தின் வெற்றி மேலும் பயனளிக்கும்.

நல்ல திருப்பம் - இந்தியாவிற்கே வழிகாட்டும் அருமையான கல்விக் கண்ணொளி பரப்பும் பசியாறும் திட்டம், தொடரட்டும்!

முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Also Read: ’மாணவர்களுக்கான வரப்பிரசாதம் காலை சிற்றுண்டி திட்டம்’.. தி.மு.க அரசுக்கு தே.மு.தி.க பாராட்டு!