Tamilnadu

மத்திய அரசின் தக்கைத்தனத்தை முதன்முதலாக உடைத்துப் போட்டவர் பேரறிஞர் அண்ணாதான்.. அது இன்றும் நீடிக்கிறது!

அறிஞர் அண்ணா!

தமிழ்நாட்டை செதுக்கிய முதன்மைச் சிற்பி. அவருக்கான உளியாக திராவிட அரசியலை பெரியார் கையளித்தார். அதற்கே இந்திய துணைக்கண்டம் அவரைத் திரும்பிப் பார்த்தது. பெரியார் அளித்த உளியை மாடலாகக் கொண்டு மேலும் பல உளிகளை உருவாக்கினார் அண்ணா. அவற்றைக் கொண்டு வரலாற்றை அவர் கிளறுகையில், ஏற்கனவே படித்த பழைய வரலாற்றுச் செய்திகள் புதிய அர்த்தங்களை அளித்தன.

உதாரணமாக, "மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால் இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? சரிந்த சாம்ராஜ்யங்களுடன் இப்போது இருக்கிற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த சாம்ராஜ்யவாதிகள் - தமது சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவுதான் ஏற்பட்டது என்பதை சரித்திரம் உணர்ந்தவர்கள் அறிவார்கள்." என 1968-ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா பேசினார்.

பேரறிஞர் அண்ணா

வரலாற்றினூடாக எல்லா காலங்களிலும் தக்காண விளிம்பு வரை கூட பேரரசுகள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழர் நிலம் தனக்கான அரசியல் என்னவென தெளிவாகவே எப்போதும் இருந்திருக்கிறது. எந்தப் பேரரசையும் எந்த ஆதிக்கத்தையும் எந்த மையக் குவிப்பையும் எந்தச் சுரண்டலையும் எல்லா காலங்களிலும் எதிர்த்தே வந்திருக்கிறோம்.

இந்தியத் துணைக்கண்ட வரலாறு பிரிட்டிஷ் காலத்துக்கு பிறகு மாற்றியெழுதப்பட்டது. சமஸ்தானங்களாக இருந்த பகுதிகள் ஒருமித்த பரப்புகளாக பண்பாடு மற்றும் மொழி அடிப்படைகளில் உருமாறின. நிர்வாக வசதிகளுக்காக அவை மாகாணம், மாநிலம் என வெவ்வேறு தன்மைகளுக்கு பிரிக்கவும் பட்டன. சுதந்திர இந்தியாவிலிருந்து மீண்டும் மத்திய அரசு என்கிற வடிவம் இந்தியத் துணைக்கண்டத்தில் எழுந்தது.

சிற்றரசர்கள், சமஸ்தானங்கள் என்கிற அரசியல் முறை கலைந்து கட்சி பாணியிலான அரசியல் முறை எழுந்த பிறகு உருவானதால் மத்திய அரசு வடிவம் பற்றிய பார்வை இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதிகளில் பெரியளவில் இருக்கவில்லை. பெரியார் மட்டும் மத்திய அரசின் ஆளும் வர்க்கத்தின் வருணப் பண்பை சித்தாந்தரீதியில் விளக்கி, அதை எதிர்க்கும் அரசியலை முன்னெடுத்தார். அவர் வழியில் வந்த அறிஞர் அண்ணா, முதன்முறையாக மத்திய அரசு வடிவத்துக்கு எதிரான அரசியல்ரீதியிலான வடிவத்தை இந்தியத் துணைக்கண்ட அரசியலில் முன்னெடுத்தார்.

மத்திய அரசு இன்றி மாநிலங்கள் இருக்க முடியும் என்றும் மாநிலங்கள் இன்றி மத்திய அரசுதான் இருக்க முடியாது என்றும் நேரடியாக மத்திய அரசின் தக்கைத்தனத்தை இந்திய அரசியலில் முதன்முதலாக உடைத்துப் போட்டவர் அறிஞர் அண்ணாதான். மேற்குறிப்பிட்ட அண்ணாவின் வார்த்தைகளில் கூட மத்திய அரசு என்கிற வடிவம் வரலாறு முழுக்க மக்கள் விரோதமாகவே இருந்திருக்கிறது எனச் சுட்டிக் காட்டும் லாவகம்தான், அறிஞர் அண்ணாவின் சிந்தை கொண்ட சமயோசிதம். அந்த சமயோசிதமே தமிழ்நாட்டின் பிரத்தியேகதையாகயாக இன்றும் நீடிக்கிறது.

அறிஞர் அண்ணா, தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, தமிழ் வரலாற்றின் ஓர்மையும் கூட!

Also Read: "‘மக்­க­ளோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்­சர்.." முரசொலி புகழாரம் !