Tamilnadu
"‘புதுமைப் பெண்’ : இந்தியாவிற்கே வழிகாட்டும் ஒரு புரட்சி திட்டம்.." -டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
தமிழ்நாட்டின் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கல்வி பயின்ற பெண்களின் திருமண உதவிக்காக கலைஞரின் தி.மு.க ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அதனை விரிவுபடுத்தி 'தாலிக்கு தங்கம்' என்ற திட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில், தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 'தாலிக்கு தங்கம்' என்ற திட்டத்தை மாற்றி, அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேரவிருக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், ஆசிரியர் தினமான இன்று (05.09.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் இந்த முத்தான திட்டத்தை சென்னை இராயபுரத்தில் பாரதியார் மகளிர் கல்லூரியில் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் 'அரவிந்த் கெஜ்ரிவால்' கலந்து கொண்டு "26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது விழாவில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'புதுமைப் பெண் திட்டம்' வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் என்று பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஆசிரியர் தினம். அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமுதாயத்தின் அடிப்படையே ஆசிரியர்கள் தான். 'புதுமைப் பெண்' உட்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் இந்த 'புதுமைப் பெண் திட்டம்'. புதுமைப் பெண் திட்டத்தை துவக்கி வைக்க என்னை அழைத்தபோது உண்மையிலேயே ஆச்சர்யம் ஏற்பட்டது. ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்துக்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை.
ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டதோடு மட்டும் இல்லாமல், அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியைப் போல் தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாநில அரசும் நல்ல முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன.
ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து இது போன்று நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவியர், திறமை இருந்தும், வறுமை காரணமாக தங்கள் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் மாணவியரின் இடைநிற்றலைத் தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம்.
இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். டெல்லி, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்; அரசுப்பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே!
நல்ல, தரமான, இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். அரசுப்பள்ளிகளை மூடினால் ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்க எங்கே செல்வர்? - அப்படி இருந்தால் நாடு வளராது.
இனி கல்வி சார்ந்த புதிய திட்டங்களை துவக்கும் போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன்; நானும் புதிய திட்டங்களை துவக்கி வைக்க டெல்லிக்கு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பேன்" என்று பெருமிதத்துடன் பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!