Tamilnadu

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய முக்கிய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.9.2022) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை:-

பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய அந்தத் திட்டத்தை நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். வந்தவுடன் முதல் கையெழுத்துப் போட்டதே அந்தக் கையெழுத்துத்தான். அதுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பால் விலையை குறைத்தோம். பெட்ரோல் விலையை குறைத்திருக்கிறோம். வருகிற 5-ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். எதற்கு என்று கேட்டால், ஸ்மார்ட் கிளாஸ். மாநகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு, ஒரு திட்டம் வகுத்திருக்கிறோம். டெல்லிக்குச் சென்றபோது அதை நான் பார்த்துவிட்டு வந்தேன். அதைத் தொடங்கி வைக்க வரவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். வரக்கூடிய அதே நேரத்தில் தான், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவியர்கள் அவர்களுக்கு மாதந்தோறும் 1000/- ரூபாய் வழங்குவோம் என்ற உறுதிமொழியைக் கொடுத்தோம். அந்தத் திட்டத்தையும் அன்றைக்குத்தான் தொடங்கப் போகிறோம்.

இன்னொன்று இருக்கிறது. இப்போது வருகிறபோது சில தாய்மார்கள் கேட்டார்கள். உரிமைத் தொகை என்னவாயிற்று? மாதம் ரூபாய் 1000 கொடுக்கிறேன் என்று சொன்னீர்களே. வரும், வரும். நிதியை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம், விரைவில் அதையும் சரி செய்து நிச்சயமாக, உறுதியாக அதையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் கலைஞருடைய மகன், சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின்.

ஆகவே, அந்த நம்பிக்கையோடு இருங்கள், அந்த நம்பிக்கையோடு தான் இன்றைக்கு மக்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: ’நாங்கள் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்’ : பொய்பேசும் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்!