Tamilnadu

"நீட் தேர்வு : ஏறும் ஏணி இல்லை.. அது ஒரு தடைக்கல்.." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் !

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு இன்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் உயர்கல்வித்துறையின் செயல்பாடுகள், புதிய கல்விக்கொள்கை பாடத்திட்டத்ததை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பேசிய அமைச்சர் பொன்முடி, கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகளவில் தலைசிறந்த பல்கலை., தமிழகத்தில் உள்ளன. நாட்டிலேயே தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன; நாட்டிலேயே தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன; நாட்டிலேயே தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன; அனைவருக்கும் கல்வி, தகுதிக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கையாகும்.

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல்கலை, கல்லூரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. உயர்கல்வியால் சமூகத்தில் நன்மதிப்பும் வளமான வாழ்க்கையும் உருவாக்குகிறது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரி - 27.1 %; தமிழ்நாட்டில் - 51.4 % என்று உள்ளது. அதாவது உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது தேசிய சராசரியை விட தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

மாணவர் எண்ணிக்கை உயரும் போது கல்வி தரம் குறையும் என்ற வாதத்தை ஏற்க மாட்டோம். சென்னை பல்கலையில் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் போது கல்வித்தரம் பாதிக்கவில்லை. பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுகிறது.

தொழில்நிறுவனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைவருக்கும் கல்வி; அனைவருக்கும் உயர்கல்வி; அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்பதே திராவிட அரசின் இலக்காக உள்ளது" என்றார்.

தொடர்ந்தது பேசிய அவர், "கல்வித்தரத்தை உயர்த்துவதுடன் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

நீட் தேர்வை நாங்கள் பயத்தில் எதிர்க்கவில்லை; அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்பு தான் தகுதியை தீர்மானிக்க வேண்டுமே தவிர, தகுதி இருந்தால் தான் படிக்க வேண்டும் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி !. புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அது மாநில உரிமை சார்ந்தது" என்று தெரிவித்தார்.

Also Read: இசை மூலம் உருவான காதல்.. 55 வயது ஆணை கரம்பிடித்த 18 வயது இளம்பெண் :பாகிஸ்தானில் நடந்த வித்தியாச திருமணம்!