Tamilnadu
"ஆசிரியர்களிடம் 'இது நமது ஆட்சி என்கிற மனநிலை இருப்பதை உணர்கிறேன்".. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமெழி 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி:-
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான கொள்முதல் பணிகளை இன்னும் எல்காட் தொடங்கவில்லை. மாணவர் எண்ணிக்கை விவரங்களை பள்ளிக்கல்வித் துறை தாமதமாக வழங்கியதாக எல்காட் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படுகிறதே?
கொரோனா கால சிக்கல்களில் இதுவும் ஒன்று. மாணவர் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாததற்கு அதுவே காரணம், தவிர, எல்காட் நிறுவனத்துக்கு சரியான மாணவர் எண்ணிக்கை வழங்கவில்லை என்று துறை ரீதியான புகார் எதுவும் வரவில்லை. இரு தரப்பும் இணைந்தே பணியாற்றுகின்றன. கொரோனா காலத்தில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி குறைந்ததாலும் உரிய காலத்தில் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதில் இடர்ப்பாடு நிலவுகிறது.
'எண்ணும் எழுத்தும் திட்டத்தின்படி கற்பிக்க ஆசிரியர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இதைவிட எளிமையாக வேறு சிறந்த வழிமுறைகள் இருப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறதே?
2025-ம் ஆண்டுக்குள் தன்னிறைவான எழுத்தறிவு பெற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் "எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பதவி மீண்டும் கொண்டு வரப்படுமா? ஐஏஎஸ் அதிகாரிகளால் இப்பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறதா? அவர்களது கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா?
மாணவர்களுக்கு பயன் அளிக்கக் கூடிய எந்த செயலாக இருந்தாலும், அதை யார் கூறினாலும் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். அதேநேரம், பணிகள் சுணக்கமாக இருக்கிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை. முந்தைய காலங்களைவிட சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆணையர், இயக்குநர் நியமன விவகாரங்களில் முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்.
STEM பயிற்சித் திட்டம், கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் போன்ற விவகாரங்களில் அடுத்தடுத்து குழப்பமான அறிவிப்புகள் வந்தன. இதற்கு என்ன காரணம்?
அரசு துறையுடன் இணைந்து STEM லேப் திட்டங்களை செயல்படுத்தலாம் என முடிவெடுத்த பிறகுதான் தனியாருக்கான அனுமதியை ரத்து செய்தோம். கடந்த ஜூன் 20-ம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் 100 அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சியையும் செய்து முடித்தோம். கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நிய மனத்தை விமர்சித்து சில தினங்களுக்கு முன்னதாக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டன. அதற்கு மதிப்பளித்து, அந்த நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.
சமீபகாலமாக, பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அரசுக்கு எதிரான அதிருப்தி மனப்பான்மை அதிகரித்துவருவதாக கூறப்படுகிறதே?
மாதம் ஒரு முறை ஆசிரியர்களை நேரடியாக சந்தித்து வருகிறேன். ஆசிரியர்களுடன் அன்பில்' என்ற நிகழ்வு மூலமாகவும் அவர்களுடன் கலந்துரையாடி வருகிறேன். எனது வீட்டிலும், தலைமைச் செயலக அலுவலகத்திலும் 'ஆசிரியர் மனசு' புகார் பெட்டி வைத்துள்ளோம். மேலும் அவர்கள் என்னை எளிமையாக தொடர்பு கொள்ள வசதியாக மின்னஞ்சல் முகவரிகளையும் அறிமுகம் செய்துள்ளேன். இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அவற்றை முறைப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளோம். இப்போதும் ஆசிரியர்களிடம் 'இது நமது ஆட்சி என்கிற மனநிலை இருப்பதாகவே நான் உணர்கிறேன்.
- நன்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!