Tamilnadu
"தமிழ் மண்ணில் காலூன்ற காவிகளின் வித்தைகள் ஒருபோதும் பயன்தராது" - தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை !
தமிழ்நாடு நிதியமைச்சரின் கேள்விக்குப் பதில் எங்கே? இலவச ஒழிப்பு என்பது கல்வியை முடக்கும் குரலே! கானல் நீர் வேட்டையாடாதீர்கள் காவிகளே என்று பாஜகவினரை விமர்சித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:"தமிழ்நாட்டில் வெற்றிகரமாக கடந்த ஓராண்டு காலத்திற்குமேல் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வளர்ச்சியைத் தடுக்க, ஒன்றியத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி பல்வேறு தடைகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாக்கிவருகிறது!
தமிழ் மண்ணைக் காவி மயமாக்க பகற்கனவு காணும் செயல்முறை
1. அனுப்பப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிமூலம் ஒரு போட்டி அரசாங்கம் போன்று, தமிழ்நாடு அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு விரோதமான உரைகளையும், நிகழ்வுகளையும் நடத்தி மோதல் போக்கினைத் தூண்டும் வித்தை ஒருபுறம்.
2. கூலிப் பட்டாளங்களையும், பழைய கிரிமினல்களையும் அழைத்துப் பெரிய கூட்டம் சேர்ப்பதுபோல ஒரு ‘பிரமையை’ உருவாக்கி, ஆதாரமற்ற, அரைவேக்காட்டுச் செய்திகளை அன்றாடம் பரப்பும் அண்ணாமலையர்களை களத்தில் இறக்கி, தமிழ் மண்ணைக் காவி மயமாக்க பகற்கனவு காணும் செயல்முறை.
3. இவற்றைவிட ஊடக முதலாளிகளையும், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் ஆசிரியர்களையும் அழைத்து தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்படி தி.மு.க. ஆட்சியைப்பற்றி திட்டமிட்ட பொய்ச் செய்திகளைப் பரப்புதல்.
4. இலவசங்களால்தான் ‘திராவிட இயக்கங்கள்’ பதவிக்கு வந்தன என்று தப்புக் கணக்குப் போட்டு, எளிய மக்களின் வயிற்றுப் பசி, அறிவுப் பசி போக்கிடுவதை சட்டப்படித் தடுக்க பா.ஜ.க.வின் வழக்குரைஞர் ஒருவரை விட்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்துத் தடுக்க முயற்சிக்கும் விசித்திரத் திட்டம். இப்படி பலப்பல!
காவிகளின் முகமூடியைக் கழற்றிக் காட்டியுள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர்!
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘‘வித்தை’’களை விளக்கியதன்மூலம் அவர்கள் முகமூடியைக் கழற்றிக் காட்டியுள்ளார்.தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர், சிறந்த பொருளாதாரம் பயின்று, நடைமுறையில் தேர்ந்த நிர்வாகப் பொறுப்புகளை வெளிநாடுகளில் பார்த்து, தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றவே பழைய நீதிக்கட்சி பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்த ஓர் அறிஞர்!
பொறுப்புக்கு வந்தவுடன் அவர் வெள்ளை அறிக்கை தந்து கஜானாவை எப்படி முந்தைய ஆட்சியாளர்கள் காலி செய்து, கடனையும், வட்டிச் சுமையையும் ஏற்படுத்தினர் என்பதையும், தமிழ்நாடு அரசின் நிதிக் கொள்கையை சரியான பாதையில் செலுத்திட, முதலமைச்சருக்கு உதவிட பன்னாட்டு பொருளாதார அறிஞர்கள் - நோபல் பரிசு பெற்ற பலரையும் மதி உரைஞர்களாக்கி சீரிய முறையில் நிதி நிர்வாகத்தினை நடத்திடும் வகையில் தனது பட்ஜெட்டை போட்டு, மாநிலங்களின் வரி உரிமைகளைப் பறித்து, ஒன்றிய அரசு தன்னிடம் வைத்து, அதை தங்களது விருப்பத்திற்கேற்பவும், பாரபட்சத்துடனும் ஒரு பகுதியை திருப்பி அளித்தல் போன்ற நிதி ஓரவஞ்சனையை அவ்வப்போது அம்பலப்படுத்தி, உரிமைக் குரல் கொடுக்கவும் முறையான விஷயங்களை ஒன்றிய அரசுடன் ‘உறவுக்குக் கை கொடுப்பதிலும்‘ தெளிவுடன் தமது கடமையாற்றுகிறவர்
‘காவி’களின் விஷம வேலைகள்!
திட்டமிட்டே பல ‘காவி’களும், அவர்களின் ஏவுகணையான சில பார்ப்பன ஏடுகளும், இவரைப்பற்றிய அவதூறு செய்திகளைப் பரப்பி, ‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி’ என்று அறிஞர் அண்ணா ‘ஆரிய மாயை’ நூலில் கூறியதுபோன்ற விஷம வேலைகளைச் செய்து வருகின்றன! மோடி அரசின் நிதியமைச்சரின் செயல்திறன், நிதிக் கொள்கை ஆளுமை குறித்து அக்கட்சியைச் சார்ந்த சு.சாமிகள் கூறியதைவிட, நமது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் எதுவும் கூறவில்லையே!
பன்னாட்டளவில் சிறப்பு வாய்ந்த அய்ந்து பொருளாதார நிபுணர்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்க, பன்னாட்டு அளவில் அய்ந்து பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள்; இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்காவின் மாசாசூஸெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் பேராசிரியர் எஸ்டர் டஃப்லோ, இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், இந்தியப் பொருளாதாரம் குறித்து விரிவாக அறிந்த பேராசிரியர் ஜான் த்ரே, இந்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர். தமிழ்நாடு திட்டக் குழுவில் சிறப்பான பொருளாதார அறிஞர்கள், நிதித்துறை மேலாண்மையாளர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட தகுதி பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு இல்லாத நிலை. பல அறிஞர்கள் ஒன்றிய அரசில் பொறுப்பிலிருந்து வெளியேறிச் சென்ற வரலாறும் மறுக்கப்பட முடியாது!பண மதிப்பிழப்பின்மூலம் - கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற திட்டம் பெற்ற ‘‘வெற்றி’’ எப்படி என்பது உலகறிந்த ஒன்று!அரசமைப்புச் சட்டம் கூறும் ‘‘ஜனநாயகக் குடியரசை’’ எப்படி அடைய முடியும்?
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு நாங்கள் நிதித் துறை பாடம் எடுக்கிறோம் என்பதுபோல், மாநில உரிமைகளைப் பறித்தால், அரசமைப்புச் சட்டம் கூறும் ‘‘ஜனநாயகக் குடியரசை’’ எப்படி அடைய முடியும்?
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான விளக்கத்தை ‘இலவசங்கள்’பற்றிய தவறான பரப்புரைகளுக்குப் பதிலாகத் தந்தார்!இலவசங்கள் வேறு; மக்கள் நல வாழ்விற்குத் தேவையான நலத் திட்டங்களின் தத்துவம் வேறு என்று கூறினார்.
நிதியமைச்சரின் கார்மீது செருப்பு வீசி தங்களது ‘‘பெருமை’’யைக் காட்டிக் கொண்டுள்ளனர். வறுமையும், பேதமும் கொடி கட்டிப் பறக்கும் நாட்டில், ஒரு மக்கள் அரசின் கடமை - வெறும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமல்ல - (Police State) மாறாக, மக்கள் உரிமை, நலம் - இவற்றைப் பார்த்து மக்கள் நலத் திட்டங்களை அளித்தல் (Welfare State) என்பதே சரியானது. ‘திராவிட மாடல்’ ஆட்சி அதைத்தான் நாளும் - கடும் நிதி நெருக்கடியிலும் சிறப்பாக செய்து வருகிறது; அதற்கு உரிய வகையில், நிதியமைச்சர் போன்றவர்கள் தங்களது அறிவாலும், அனுபவத்தாலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள். அத்தகையவர்கள்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில், அவரை ‘காவி’கள் எதிர்த்து, கார்மீது செருப்பு வீசி தங்களது ‘பெருமை’யை(?)க் காட்டிக் கொண்டுள்ளனர்.எனவே, தேவையற்ற நிதி நெருக்கடியை உருவாக்கி, இலவசங்கள் கூடாது என்றால், கல்விதான் முதலில் அடிபடும்! இப்படி பலவும்தான்! நாம் ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் தந்து, அதில் வெறும் 33 காசுகளை மட்டுமே திரும்பப் பெறும் நிலைதான் உள்ளது என்று நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்!
‘காவி’கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை
எனவே, மக்களுக்கு வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் உள்ள வேறுபாடு புரியாதா? தமிழ் மண்ணில் காலூன்ற இப்படி விஷம வித்தைகள் ஒருபோதும் பயன் தராது என்பதை ‘காவி’கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.எனவே, கானல் நீர் வேட்கையாகாதீர்கள் காவிகளே!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?