Tamilnadu
இலவசங்கள் என்றால் என்ன?.. நெறியாளர் கேட்ட கேள்விக்கு இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழ்நாடு அமைச்சர் PTR!
உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.மேலும், "இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியல் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன. மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நெறியாளர், "நான் இப்போது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
அவர் முன்னர் முதலீட்டாளராக நிதித்துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால் அரசியல்வாதிகள் நிதித்துறையை கையாளும் விதம் குறித்து விமர்சிப்பவராக இருந்திருப்பார். தற்போது அவரே தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக பொது நிதியை கையாளும் பொறுப்பில் இருக்கிறார். நாம் தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த நாட்டை பொறுத்தவரையில் புள்ளி விவரங்களின் படி பஞ்சாப், ராஜஸ்தான் பீகார், கேரளா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் என ஒவ்வொரு மாநிலமும் மிகத் தீவிரமான நிதி நெருக்கடியில் உள்ளது.
அங்கெல்லாம் மாநில மொத்த உற்பத்தியில் கடனின் விகிததம் 30% முதல் 50% வரையில் உள்ளது. இது மிக ஆழமான பிரச்சனைக்குரியதாகும். இத்தகைய சூழலில் இந்திய அரசியலே இலவசங்கள் குறித்த மிக காத்திரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இலவசங்கள் என்றால் என்ன? இலவசங்கள் எது என்பதை யார் வரையறுக்கிறார்கள்? இலவசங்கள் யார் முறைப்படுத்துவது? அவற்றை முறைப்படுத்த வேண்டுமா? வேண்டும் என்றால் யார் அந்த பணியை செய்ய வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால் நான் சற்று பின்னோக்கி செல்கிறேன். இந்த விவாதம் இதற்கு முன்னர் 15வது நிதி குழு தனது நெறிமுறைகளை வெளியிட்ட போதே நடைபெற்றது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளிலேயே ஜனரஞ்சக திட்டங்களை ஊக்குவிக்க கூடாது என்ற வரி இடம் பெற்றிருந்தது. இது குறித்து விவாதிக்கப்பட்டபோது இலவசங்கள் என்று அழைக்கப்படுபவை எல்லாம் ஜனரஞ்சக திட்டங்களாக கருதப்பட்டது.
அந்த சமயத்தில் ஒவ்வொரு மாநில நிதியமைச்சர்களும் மாநில பிரதிநிதிகளும் குழுவில் இடம் பெற்றிருந்த அனுபவமிக்க பொருளாதார அறிஞர்களான முனைவர் அனுப்பு சிங் போன்றவர்கள், தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்திகாந்ததாஸ் போன்ற அதிகாரிகள் மற்றும் என்.கே.சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இலவசங்கள் குறித்து மிக விரிவான பகுப்பாய்வை நான் மேற்கொண்டேன். அந்த பகுப்பாய்வு இலவச உணவு, இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் முதல் என்னைப் பொறுத்தவைரை இலவசங்கள் என்ற பெயரில் வீண் செலவு என்று கருதுகிற இருசக்கர வாகனம் வாங்குவதற்கு பெண்களுக்கு 50% தள்ளுபடி என்ற பெயரில் ரூ.25 ஆயிரம் வழங்கும் திட்டம் வரையிலான பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியது.
இலவசங்கள் குறித்து அணுகுவதற்கு மிக நுணுக்கமான வழிகளும் உள்ளது. அவை ஆக்கபூர்வமானவை. அவை மனித வளம் மீதான முதலீடு அவை பாதிப்புகளை தணிப்பதற்காக பயன்படக்கூடியவை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துபவை என பல்வேறு நுணுக்கமான பயன்கன் உள்ளன.
ஒன்று நிதி எப்படி கையாளப்படுகிறது என்பதை கண்காணிப்பவராக உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் செயல்படுகிறது? . அதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. நமது நாட்டினுடையது மட்டுமல்ல பெரும்பாலும் எந்த ஜனநாயக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலும் உச்சநீதிமன்றம் மட்டுமல்ல எந்த ஒரு நீதிமன்றமும் எப்படி மக்களின் பணம் செலவிடப்படுகிறது என்பதை முடிவு செய்ய அதிகாரம் இல்லை. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமேயான அதிகாரத்திற்கு உட்பட்டது.
அது அதிபர் ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவின் காங்கிரஸ் முறையாகட்டும் அல்லது இங்கிலாந்தில் உள்ள பாராளுமன்ற ஆட்சிமுறையாகட்டும். அல்லது மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்கள் என எதுவாக இருந்தாலும் சரி. எனவே எனது முதல் கேள்வி என்பது ஏன் உச்ச நீதிமன்றம் இந்த விவாதத்தில் தலையிடுகிறது?
இரண்டாவது கேள்வி இலவசங்கள் அவ்வளவு தீய காரியம் என்றால் மாண்புமிகு பிரதமர் அவர்கள் எனது கருத்துப்படி தமிழக வரலாற்றிலேயே மோசமாக இலவசத் திட்டமான அதிமுக அரசின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க எதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு பறந்து வந்தார்?. பல்வேறு முறைகேடுகள் அதில் நடைபெற்றன எனது கருத்துப்படி அனைத்து வழிகளிலும் அது மோசமான திட்டம்.
எனவே பிரதமர் அவர்கள் இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிப்பவராக இருக்கும் போது எதற்காக இப்படிப்பட்ட திட்டத்தை துவக்கி வைக்க வேண்டும்? இவைதான் நான் கேட்க விரும்பும் இரண்டு கேள்விகளாகும். ஆனால் நீங்கள் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவச சேலைகள், இலவச மிக்சிகள், இலவச கிரைண்டர்கள், இலவச தொலைக்காட்சிகள் ஆகியவை வழங்குவதாக அறிவித்திருக்கும் மாநிலத்திலிருந்து வந்திருப்பவர் என தெரிவித்தார்.
இதையடுத்து நெறியாளர், "நீங்கள் உச்ச நீதிமன்றம் இதில் தலையிடக்கூடாது என்றால் பி.டி.ஆர் நான் உங்களிடம் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன் யார் எது நல்ல இலவச திட்டம் எது தீய இலவச திட்டம் என்பதை வரையறுப்பது?. ஏனெனில் இங்கு முதன்மையான பிரச்சனை என்பது மாநிலங்களில் பெரும்பாலும் இவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதே. எனவே இந்த சூழலில் கெஜ்ரிவால், குஜராத் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் என்று விரும்புவதால், அவர் மட்டுமல்ல எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் இத்திட்டங்களின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதால் எந்தவிதமான வாக்குறுதிகளை வேண்டுமானாலும் வழங்குவார்கள். உங்களுக்கு உச்ச நீதிமன்றம் இதில் தலையிடுவது பிரச்சனையாக இருந்தால் பிறகு யார்தான் இதில் தலையிடுவது? இப்படிப்பட்ட அனைத்து மாநிலக் கட்சிகளையும் நாம் வேண்டும் என்றால் பஞ்சாப், ஆந்திர பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்கள் இலங்கை போன்ற தனி குடியரசாக இருந்திருந்தால் மிக மோசமான அபாயகரமான நிதிசூழலில் இருந்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர், " எனது கருத்து என்னவென்றால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஜனநாயக முறை இதைத்தான் வலியுறுத்துகிறது. மக்களின் வாக்குகள் தான் அனைத்தையும் விட முதன்மையானது. யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள்தான் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமைப்பட்டவராகிறார்கள்.
தமிழ்நாடு அதிக இலவசங்களை வழங்குகிற மாநிலம் என்று நீங்கள் கூறினால் நான் இரண்டு விடயங்களை இங்கு குறிப்பிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருவாய் மனித வள மேம்பாடு, சமூக மேம்பாடு, உயர்கல்வியில் சேர்ப்பவர்களின் விகிதம், ஆயிரம் நபர்களுக்கு எத்தனை மருத்துவர்கள் உள்ளார்கள் என்கிற விகிதம் ஆகியவற்றில் நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
மாநிலத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும்என்பது எங்களை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருந்தால் நீங்கள் கூறலாம். எங்களது செயல்திறனில் என்ன தவறு உள்ளது?. எங்களது மாநிலத்தின் தனி நபர் வருவாய் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். எங்கள் மாநிலத்தின் பணவீக்கம் தேசிய சராசரியை விட 2.5% குறைவு. நிலைமை இப்படி இருக்க எப்படி யாரோ ஒருவர் நாங்கள் எங்ளது பணியை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் சரியாக பணியாற்றுகிறோமா? இல்லையா என்பதை, மற்றவர்களுக்கான தேவை இங்கு என்ன உள்ளது?. தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது என்றால் இங்கு ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தின் பொருள் என்ன?. யாரை நம்ப வேண்டும், யாரை நல்ல தலைவர் கெட்ட தலைவர் என்ற வேறுபாட்டை வேறு யாரோ உருவாக்க வேண்டியது இல்லை.
அதைத்தான் மக்கள் தேர்தலின் மூலம் முடிவு செய்கிறார்களே. அதற்கு மேல் என்னதான் வேண்டும்?. இது மிகவும் முக்கியமான மற்றும் வலிமையான எதிர்வினை. நானே உங்களுடன் விவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ஒருவரை பதிலளிக்க கோருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
பின்னர் நெறியாளர் மற்றொரு கேள்வியாக, ஆனால் நிறைவு செய்வதற்கு முன்னால் என்னிடம் மற்றொரு கேள்வி உள்ளது இந்த விவாதம் எங்கு செல்ல உள்ளது? என கேட்டுள்ளார்.
இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்திய அரசியலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்துக்கு எதிராக பிரதமர் அவர்களே அழுத்தம் தருகிறார் முன்பு எப்போதும் இவ்வாறு நடந்ததில்லை. ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என்று கருத்தாக்கமே.
இங்கு பிரதமரும், பா.ஜ.கவும் கூற விரும்புகிற கருத்து என்னவென்றால் நீங்கள் மேம்பட்ட உருவாக்கக்கூடிய காரியம் எதையும் செய்ய விரும்பினால பெருக்க விளைவை உருவாக்கக்கூடிய காரியங்களை செய்யுங்கள். அத்தகைய நலத்திட்டங்களில் தான் முதலீடு செய்ய வேண்டுமே தவிர மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய மக்களுக்கு கட்டமைப்பு சார்ந்த தொழில் நுட்பம் சார்ந்த அல்லது அறிவுத்திறன் சார்ந்த வசதிகளை உருவாக்காத எதிர்காலத்திற்கு பயனளிக்காத திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது என்பதே.
இந்த சூழநிலையில் இந்திய அரசியலுக்கு அரசாங்கத்திற்கும் முக்கியத்துவமான வரையறையை பிரதமர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். நான் இங்கு ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் நீங்கள் கூறும் கருத்திற்கு ஏதாவது அரசியலமைப்புச் சட்ட அடிப்படை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் நாங்கள் செவி கொடுக்கலாம். அல்லது நோபல் பரிசு என நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று நிரூபிக்க ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.
அல்லது உங்களிடம் சிறப்பான செயல் திறனுக்கான வரலாறு இருக்க வேண்டும். நீங்கள் பொருளாதாரத்தை சிறப்பாக வளர்த்துள்ளீர்கள். அல்லது கடனை குறைத்துள்ளீர்கள். தனிநபர் வருவாயை அதிகரித்துள்ளீர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளீர்கள் என ஏதாவது இருந்தால் நீங்கள் கூறுவதை நாங்கள் கவனிக்கலாம்.
இவற்றில் எதுவுமே இல்லைஎன்றால் நாங்கள் ஏன் யாரோ ஒருவர் சொல்வதை இதுதான் சரியான வரையறை என்றும், அது கடவுளின் சார்த்தை என்றும் நம்ப வேண்டும்?. நான் ஏன் யாரோ ஒருவரின் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் முறை நாங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கு உரிமை அளிக்கிறது. முதலமைச்சர் எனக்கு ஒரு பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதை நான் சரியாக செய்து வருகிறேன்.
நாங்கள் ஒன்றிய அரசை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளும் அவ்வாறே தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம் என உறுதிபட கூறுவேன். ஒன்றிய நிதி ஆதாரத்திற்கு நாங்கள் மிகப்பெரிய பங்களிப்பவராக உள்ளோம். மிகப்பெரிய அளவிற்கு. நாங்கள் ஒரு ரூபாய் ஒன்றிய அரசுக்கு வழங்கினால் எங்களுக்கு 33-35 பைசா தான் திரும்ப கிடைக்கிறது. இதற்க மேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?. அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உள்ளதா?. இல்லை. நீங்கள் நோபல் பரிசு பெற்றுள்ளீர்களா?. இல்லை. இது என்ன அரசியல் அமைப்புச் சட்டத்தையும் மீறிய சொர்க்கத்திலிருந்து இடப்பட்ட கட்டளையா?" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!