Tamilnadu

மணிகண்டன் பூபதி பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி," கல்வித்துறையில் புதிதாகத் தொடங்கப்படும் திட்டங்கள் மாவட்ட அளவில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இயக்குனர், இணை இயக்குனர்கள் அளவிலான வழக்கமான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது.

கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவரது பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர் மீதான புகார் குறித்து உண்மையாக இருந்தால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில் இருந்து ஒரு நபர் கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ -ஆக நியமிக்கப்படுவார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு விதி உள்ளது. அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆர்டர்லி முறை ஒழிப்பு - முதலமைச்சர் மற்றும் DGP நடவடிக்கை வரவேற்கத்தக்கது” : ஐகோர்ட் நீதிபதி புகழாரம்!