Tamilnadu

தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்துரிமை ரத்து.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி !

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தனது மகன் வைத்திலிங்கத்தை தனியாக கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்திலிங்கத்திற்கு திருமணமான நிலையில், தந்தையுடன் அனைவரும் சேர்ந்து கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரு நாள், வைத்தியலிங்கம் தனது தந்தை சண்முகத்திடமிருந்து சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார். பிறகு தந்தையை சரி வர பார்த்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான தந்தை சண்முகம் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில், வைத்தியலிங்கத்தை அழைத்து பேசிய அதிகாரிகள் தந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுரையும் வழங்கி அனுப்பினர். இருப்பினும் தந்தையை மேலும் அதிகமாக கொடுமை செய்து வந்துள்ளார். அதோடு அவரை வீட்டை விட்டு துரத்தியும் உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சண்முகம் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விசாரணையில், வைத்திலிங்கம், தனது தந்தை சண்முகத்திடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு அவரை கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து கோட்டாட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், தந்தை சண்முகத்திடம் இருந்து மகன் வைத்தியலிங்கம் எழுதி வாங்கிய சொத்து பாத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அதோடு வைத்தியலிங்கமத்திடமிருந்து சொத்து பாத்திரங்கள் அனைத்தையும் மீண்டும் முதியவர் சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பெற்றோரை சரிவர பராமரிக்காத பிள்ளைகளுக்கு இது ஒரு தக்க பாடமாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.