Tamilnadu
பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை.. பா.ஜ.க ஆளும் குஜராத் அரசின் கொடுஞ்செயல் : முத்தரசன் ஆவேசம்!
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது ட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மண்ணில் 2002 ஆம் ஆண்டு, முஸ்லிம் இன அழிப்புப் படுகொலை சம்பவங்கள் மனிதகுல வரலாற்றில் மிகக் கொடூரமானது. இதில் அகமதாபாத் அருகில் உள்ள ரஸ்தீக்பூர் கிராமத்தை சேர்ந்த ஐந்துமாத கர்ப்பிணி தாய் பில்கிஸ் பானு (21) மதவெறிக் கும்பலால் வழிமறித்து, அவரது மூன்று குழந்தைகளை பாறையில் அடித்துக் கொன்றதுடன் அவரோடு பயணித்த 14 பேர்களையும் கதறக் கதற படுகொலை செய்தது.
இதனைத் தொடர்ந்து அந்தக் கும்பல் பில்கிஸ் பானுவையும் அவரது தாய் உட்பட நான்கு பெண்களையும் வல்லுறவு கொண்டு, மனித கற்பனைக்கும் எட்டாத சித்தரவதை செய்தது. இதில் தப்பிப் பிழைத்த பில்கிஸ் பானு, தனக்கும், தனது குடும்பத்துக்கும், உடனிருந்தவர்களுக்கும் நேர்ந்த கொடுமைகளைக்கு நீதி கேட்டு போராடத் தொடங்கினார்.
அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிநடத்தலில் செயல்பட்ட குஜராத் காவல்துறை, வன்முறை கும்பலுடன் இணைந்து பில்கிஸ் பானு, நீதிமன்றம் செல்லாமல் தடுக்க சகல முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆதாரங்களை அழித்தது. அச்சுறுத்தலையும், மிரட்டலையும் எதிர் கொண்ட பில்கிஸ் பானு, உச்சநீதிமன்றம் வரை போராடி நியாயம் பெற்றுள்ளார்.
பில்கிஸ் பானு வல்லுறவு வழக்கில் 5 போலிஸார், 2 மருத்துவர்கள் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து, குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு சென்ற மேல் முறையீடுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றம் பில்கிஸ் பானு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவருக்கு அரசு வேலையும், பாதுகாப்பான வீடும் குஜராத் அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2019 ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதனை குஜராத் மாநில அரசு இன்று வரை மதிக்கவில்லை. இந்த நிலையில் நாட்டின் சுதந்திர தின பவள விழாவையொட்டி 11 கொடுங்குற்றவாளிகளையும் குஜராத் மாநில அரசு விடுதலை செய்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டிருக்கிறது.
குஜராத் மாநில அரசின் செயல் நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். கருத்துரிமையை மறுத்து, நாட்டுப்பற்று கொண்ட அறிவுத்துறையினரைச் சிறையில் அடைத்துப் பழிவாங்கி வரும் அரசு, உடல் நடுக்க நோயால் துடித்த, பாதிரியார் ஸ்டேன் தண்ணீர் குடிக்க உறிஞ்சு குழாய் வழங்க மறுத்த நிலையில், கொடுங்குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
குஜராத் அரசின் இக்கொடுஞ்செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தங்களது கண்டன குரலை எழுப்பிட முன் வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.'' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!