Tamilnadu
பாஜகவில் தொடர மாட்டேன்: நள்ளிரவில் அமைச்சர் PTR சந்தித்து மன்னிப்பு கோரிய டாக்டர் சரவணன் - நடந்தது என்ன?
மதுரையில் நேற்று உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் இறுதி மரியாதையை தமிழக அரசின் சார்பில் செலுத்திட நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்றார்.
அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். ராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் கேள்வி எழுப்பிட, உடனே அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.
அமைச்சர் அஞ்சலி செலுத்தி விட்டு ராணுவ வீரரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய அவரது சொந்த ஊரான புதுப்பட்டிக்கு செல்ல விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்திட முற்பட்டனர்.
ஒரு ராணுவ வீரரின் இறப்பில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்யும் கேவல மான நிலை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்துக்கட்சியினர் மத்தியில் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.
மேலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறை உள்ளது. மாநில அமைச்சர்கள், மாவட்ட அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மரியாதை செலுத்திய பிறகுதான் அரசியல் கட்சி தலைவர்கள் செலுத்த முடியும். இதுதான் அரசு நிகழ்ச்சியின் புரோட்டோகால். இந்த விவரம் கூட தெரியாமல் பா.ஜ.கவினர் அரசியல் ஆதாயத்திற்காக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மதுரை பா.ஜ.க மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் நிதியமைச்சரின் இல்லத்தில் அமைச்சரை சந்தித்து நிகழ்வுக்கு மன்னிப்பு கோரினார். பின்னர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,”இராணுவ வீரரின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்த சென்று இருந்தோம், என்ன தகுதி அடிப்படையில் அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என நிதியமைச்சர் கேட்டார்.
இதனையடுத்து விமான நிலையத்தில் விரும்பதாக நிகழ்வுகள் நடந்தது. விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் என் மனது உறுத்தி கொண்டே இருந்தது. அமைச்சர் அமெரிக்காவில் படித்தவர், இராணுவ வீரரின் உடல் அரசு விதிமுறைகள் படி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
விமான நிலையத்திற்கு வெளியே அல்லது வீரரின் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என அமைச்சர் சொன்னார். அமைச்சரின் கருத்தை நான் தனி மனித தாக்குதலாக எடுத்து கொண்டேன், நான் பாரம்பரியமாக திராவிட குடும்பத்தில் இருந்து வந்தவன்.
ஓராண்டு முன் பா.ஜ.க.வில் சேர்ந்தேன், பா.ஜ.க சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர், அதையும் பொறுத்துக்கு கொண்டு நான் பா.ஜ.க.வில் பயணித்தேன், அமைச்சர் கார் மீதான தாக்குதல் எனக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. எனக்கு தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவு நிதியமைச்சரை சந்தித்தேன்.
நிதியமைச்சரை சந்தித்து நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டேன். பா.ஜ.க தொண்டர்கள் கட்டுபாட்டை மிறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. நிதியமைச்சர் நிகழ்வை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற துவேசமான அரசியலை செய்ய நான் ஒரு ஆளாக இருக்க கூடாது என நினைதேன். அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதால் மனது இலகுவாக மாறி உள்ளது.
நான் தனிப்பட்ட முறையில் அமைச்சரை சந்தித்தேன். பா.ஜ.க.வின் பதவியை விட மன அமைதி மிக முக்கியமானது. பா.ஜ.க.வில் உறுதியாக நான் தொடர மாட்டேன். பா.ஜ.கவின் மத, வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. காலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்க உள்ளேன். தி.மு.க என்னுடைய தாய் வீடு, தி.மு.க.வில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை. தி.மு.க.வில் சேர்ந்தாலும் தவறில்லை. டாக்டர் தொழிலை பார்க்க போகிறேன்" என கூறினார்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!