Tamilnadu

முதியவரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயற்சி.. விரட்டி பிடித்த பொதுமக்கள்.. Insta காதலர்கள் செய்த சேட்டை !

கோயம்பத்தூர் மாவட்டம் வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியராயப்பன் (வயது 80). இவருக்கு மனைவி, மகன், மகள், மருமகள் இருக்கும் நிலையில், மகனும் மருமகளும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதியவரின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக வெளியே சென்றுள்ளார். இந்த சமயத்தில் பெரியராயப்பன் மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு காதல் ஜோடி, முதியவரிடம் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளனர். எனவே முதியவர் உள்ளே தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த இந்த ஜோடியினர், முதியவரின் கைகளை பிடித்து அவரை கட்டிப்போட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டி வீட்டில் இருந்து பீரோ பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை என்பதால் மற்ற இடங்களில் நகை பணத்தை தேடியுள்ளனர்.

பிறகு அங்கு ஒரு பையில் இருந்த பணத்தை எடுத்து வெளியே தப்பி செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் எதேர்ச்சியாக வெளியூரில் இருந்து மகனும், மருமகளும் வீட்டிற்கு வர முதியவர் கட்டிப்போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவர் கட்டை அவிழ்த்துவிட்ட போது முதியவர் தப்பி செல்லும் ஜோடியை பற்றி தெரிவித்துள்ளார்.

பின்னர் உடனே அவர்கள் சத்தம் போட, சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தப்ப முயன்ற ஜோடியை விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்ததால், இளைஞர் தானாக முன்வந்து சரணடைந்தார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையில் ஒப்படைத்தனர். அங்கு இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் விருதுநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், அவருடன் வந்த பெண் திருச்சியை சேர்ந்த செண்பகவல்லி என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததும், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதும் தெரியவந்தது. அதோடு இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் வீட்டில் யாரும் இல்லாத முதியவரை நோட்டம் செய்து அவர்களை கட்டிப்போட்டு பணம் பறித்து வந்துள்ளனர்.

முன்னதாக கோவை, குனியமுத்தூர் பகுதியில் முதியவர் ஒருவரை கட்டிப்போட்டு 20 ஆயிரம் ரூபாய் வரை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இருவரிடம் இருந்தும் இரும்புக் கம்பி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: எழுத்து பிழை: 2 வருடமாக சிறையில் வாடும் நைஜிரீயர்.. ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மராட்டிய அரசுக்கு உத்தரவு!