Tamilnadu
"எங்களுக்கு தெய்வமா எங்க முதலமைச்சர் இருக்காரு.." - கல்லூரி விழாவில் முதலமைச்சரை புகழ்ந்த மாணவர் !
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 2.11.2021 அன்று, கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
B.Com, BBA, BCA, B.Sc., Computer Science ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தொடங்கிய மறுமாதமே சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் தொடங்கியது.
இந்த கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு முதலாமாண்டு கட்டணமில்லா இலவச கல்வி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் கட்டணமில்லா இலவச கல்வி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.8.2022) நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதையடுத்து மாணவ - மாணவியரிடம் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு” என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது கல்வி, உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. இலவசம் என்று சொல்லுகிறபோது நீங்கள் இதைத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்." என்றார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அண்மையில் முதலமாண்டில் சேர்ந்த மாணவி ஒருவர் பேசியபோது, "நான் நிறைய கல்லூரிக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் பயில எங்களிடம் போதுமான வசதி இல்லை.
இந்த சூழலில் தான் முதலமைச்சர் தொடங்கி வைத்த கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு என் உயிர் இருக்கும் வரை நானும் என் குடும்பமும் நன்றிபட்டிருக்கிறோம்." என்றார்.
இவரைத்தொடர்ந்து அக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் பேசுகையில், "நான் தனியார் கல்லூரியில் படிக்கும் அளவிற்கு பணம் இல்லை. இந்த கல்லூரியின் விளம்பரத்தை பார்த்து இங்கு வந்து சேர்ந்தேன். இங்கிருக்கும் ஆசிரியர்கள் எங்களை பள்ளி குழந்தைகள் போல் கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். எங்கள் பெற்றோர்கள் போல் கவனித்து கொள்கிறார்கள்.
நாங்கள் ஒருமுறை சந்தேகம் கேட்டால் 100 முறை அதற்கு விளக்கம் தருகின்றனர். பொதுவா தெய்வம்தான் வரம் கொடுக்கும்னு சொல்வாங்க.. ஆனா, எங்களுக்கு தெய்வமா எங்க முதலமைச்சர் இருக்காரு.. அவரு எங்களுக்கு கேக்காமலே கொடுக்குறாரு. அதற்காக எங்கள் கல்லூரி மாணவ - மாணவியர் சார்பாக எங்கள் தளபதிக்கு நன்றியை சொல்லிகிறேன்." என்றார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்