Tamilnadu

இப்படியும் நடக்குமா? : 100 கோடி ரூபாய் போதை மருந்தை கடத்தி வந்த நபர் - சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், எத்தியோப்பியா நாட்டிலிருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்த பயணிகள் அனைவரையும் சோதனை நடத்தினர்.

அப்போது, இக்பால் பாஷா (38) என்ற பயணி மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் ஏன் ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியன் சென்று வந்தீர்கள் என அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

இதனால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாகச் சோதித்தனர். அப்போது அவர் அணிந்திருந்த காலணிகள் மற்றும் உள்ளாடைகள் என ஆடைக்குள் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்கள் மறைத்து வைத்திருந்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவற்றை வெளியே எடுத்தபோது, மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைதான் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் மறைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இவர் இந்த ரூ.100 கோடி மதிப்புடைய போதைப் பொருளை இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்கான காரணம் என்ன, எங்கெங்கெல்லாம் இதை கடத்த இருந்தார். இவர் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது. சென்னை விமான நிலையத்தில் இதுவரை ஒரே பயனிடம் ரூ.100 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மெட்ரோ ரயிலின் முன் விழுந்த முதியவர்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. ஹரியானாவில் நடந்த துயர சம்பவம் !