Tamilnadu
போதைப் பொருள் என்ற சமூகத் தீமையை அனைவரும் சேர்ந்து அழிப்போம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.8.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய முன்னுரை:-
தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இதுவரை நடந்திருக்கக்கூடிய, நான் கலந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் இது ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஒவ்வொருவிதமான மனநிலையைக் கொடுக்கும் என்று சொன்னால், அந்த வகையில், கவலை அளிக்கும் மனநிலையில்தான் நான் இங்கே அமர்ந்து உங்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு முற்பட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்காக அடிமையாகிறவர்களின் தொகையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது கவலையும் வருத்தமும் கூடவே செய்கிறது. கடந்த ஆட்சியில் இது பற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டது காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னாலும், நாம் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம் என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆறுதல்.
இந்த அடிப்படையில்தான், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் கூடியுள்ள இந்தக் கூட்டத்தை நாம் இங்கே கூட்டி இருக்கிறோம். ஏதேனும் ஒரு திட்டத்தை தொடங்குவதற்காகவோ - சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காகவோ இத்தகைய கூட்டுக் கூட்டத்தை நாம் இதுவரையில் பலமுறை கூட்டியிருக்கிறோம். ஆனால், இன்று போதைப் பொருள் தடுப்புக்காக கூட்டி இருக்கிறோம் என்று சொன்னால், இது வருங்காலத்தில் மாபெரும் பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்கிற காரணத்தால்தான்!
இந்த அரங்கத்தில் இருக்கும் அனைவரும் - நம் முன்னால் இருக்கும் அழிவுப்பாதையான போதைப் பாதையை, நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும். போதை மருந்துகள், நம் மாநிலத்துக்குள் நுழைவதைத் தடுத்தாக வேண்டும். அது பரவுவதை தடுத்தாக வேண்டும். விற்பனையாவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்தியாக வேண்டும். புதிதாக ஒருவர் கூட இந்த போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல் முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திட வேண்டும்.
இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன். நீங்கள்தான் அந்த உறுதியை எனக்கு வழங்கிட வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட, மகாராஷ்டிராவை விட தமிழகம் குறைவுதான் என்று நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை. ஒரு சிறு துளி இருந்தாலும் போதைப் பொருள் நடமாட்டம் என்பது நடமாட்டம்தான். ஒருவர் அதற்கு அடிமையானாலும் அது அவமானம்தான். எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு - போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்துவிடக் கூடாது. வளர விட்டுவிடவும் கூடாது.
போதை என்பதை நல்ல பழக்கம் - கெட்ட பழக்கம் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. உடலுக்குக் கெடுதியானது போதைப் பொருள். அதனால் கெடுதல்தான் என்ற பொருளில் நான் சொல்கிறேன். போதைப் பொருளைப் பயன்படுத்துவதற்கு ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது, அவ்வளவுதான். அந்தக் காரணத்தில் பொருள் உள்ளதா என்றால் இல்லை.
படிப்பு சரியாக வரவில்லை
மனக்கவலை ஏற்படுகிறது
வாழப் பிடிக்கவில்லை
- இப்படி எத்தனையோ காரணங்களை சொல்லிக் கொள்கிறார்கள்.
இவை அனைத்தும் கதைக்கு உதவாத காரணங்கள்தான். கோடிக்கணக்கான மக்கள் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் மட்டுமே வைத்து வாழும்போது, ஒரு சிலர் மட்டும் அது இல்லாத காரணத்தால் போதையின் பாதையில் தீர்வு கிடைக்கும் என்று சொல்வது கோழைத்தனமே தவிர வேறல்ல. போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதரின் பிரச்சினை அல்ல. அது சமூகப்பிரச்னை!
போதைப் பொருள் என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், சமூகத்தில் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பதுதான். ஒருவர் போதையைப் பயன்படுத்தி விழுந்து கிடப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கக் கூடாது. போதைப் பொருள் தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்குத் தூண்டுதலாக அமைந்து விடுகிறது. இத்தகைய குற்றம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் போதையைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், அல்லது போதை மருந்து உட்கொண்ட நிலையில் இக்குற்றத்தினைச் செய்திருப்பார்கள்.
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல் என்பது கூட்டு நடவடிக்கை. போதைப் பொருள் பழக்கம் என்பது ஒரு சமூகத் தீமை. ஆகவே இந்த சமூகத் தீமையை நாம் அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும்.
போதை மருந்தை பயன்படுத்துபவர் அதில் இருந்து விடுபட வேண்டும்.
விடுபட்டவர், போதைப் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப் பொருளை பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.
இதே பணி, கல்லூரிகளின் நிர்வாகத்திற்கும் இருக்கிறது.
வியாபாரிகள், கடைக்காரர்களும் போதைப் பொருளை விற்கமாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும்.
போதைப் பொருள்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே விற்பனையாகாமல் கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகமானது, தனது எல்லைக்குள் இப்பொருள்களின் நடமாட்டத்தைத் தடுத்தாக வேண்டும்.
காவல் நிர்வாகமானது, போதை பொருள்களை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும்.
போதைப் பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்தாக வேண்டும்.
அவர்களது மொத்த சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்.
மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
போதையின் தீமையை மருத்துவர்கள், குறிப்பாக, மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும்.
போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியை சமூகநல அமைப்புகள், அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும்.
போதையில் இருந்து மீள்பவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வளவு காரியங்களை ஒரு சமூகம் மொத்தமும் செய்தாக வேண்டும்.
அப்படி ஒருசேர அந்தச் சமூகம் இயங்கினால்தான், போதைப் பொருள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்க முடியும்.
இதை நான் சொல்லும்போது உங்களுக்கு மலைப்பாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு வேலைதான் இருக்கிறது. அந்த வேலையை ஒழுங்காகச் செய்தால் போதும். ஆகவே, நீங்கள் இதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளைக் இந்தக் கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு” தேவையான அனைத்து கருத்துக்களையும் நீங்கள் இங்கே எடுத்துச் சொல்லுமாறு கேட்டு, என்னுடைய முன்னுரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?