Tamilnadu

“கமல்ஹாசன் குரலில் 2ம் பாகம்.. கலைநிகழ்ச்சி ஏற்பாடு தீவிரம்”: நிறைவு விழா குறித்து விக்னேஷ் சிவன் பேட்டி!

செஸ் விளையாட்டுத் துறையில் மிக முக்கியமான தொடர் ஒலிம்பியாட் தொடராகும். இந்த தொடரின் 44-வது சீசன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் (தொடக்க விழா - சென்னை நேரு விளையாட்டு அரங்கில்) தொடங்கியது.

இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசி நாளன்று செஸ் ஒலிம்பியாட் தொடரின் அனைத்து பிரிவுகளின் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி சுற்று (11) செவ்வாயன்று நடைபெறுகிறது. இந்த 11-வது சுற்று நிறைவு பெற்றவுடன் இன்று மாலை தொடக்க விழா நடைபெற்ற அதே சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நிறைவுவிழா நடைபெறுகிறது.

தொடக்க விழாவை விட நிறைவு விழாவை மிகவும் பிரம்மாண்ட அளவில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வட்டமடித்து வரும் நிலையில், நிறைவு விழா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல் தொடரின் தமிழ்நாடு சார்பு அணியான சென்னை அணியின் கேப்டனுமான தோனி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஜூலை 28ம் தேதி நடைபெற்ற தொடக்கவிழாவின் போது, தமிழ், தமிழர் பெருமை குறித்த வரலாற்றை விளக்கும் 3D நிகழ்ச்சியில், தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மை, பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பழந்தமிழர் வாழ்வுமுறை, மயிலாடும் பாறை, கடல் பயணம், வாணிபம், சோழ-பாண்டிய-சேர பேரரசுகள், கீழடி நாகரீகம், சிலம்பம், ஏறு தழுவுதல், பரதாநாட்டியம், நாட்டுப்புறகலைகள், மாமல்லபுரம், தமிழ்ச்சங்கம், இலக்கியம், திருக்குறள் என 22 நிமிடங்கள் நீண்ட கலைநிகழ்ச்சி மூலமாக தமிழ் பெருமை குறித்து உலகிற்கே பாடம் எடுத்தது தமிழக அரசு.

மேலும் நடிகர் கமலஹாசன் குரலில் உருவான இந்த நிகழ்ச்சியை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்நிலையில் நிறைவு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், நிறைவு விழா இயக்குநர் விக்னேஷ் சிவன் தனியார் நிகழ்ச்சிக்கு அளித்தப் பேட்டியில், செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் நடிகர் கமல்ஹாசன் குரலில் ஒலித்த தமிழ் மண் ஆவணப்படத்தின் 2ம் பாகம் நிறைவு விழாவில் இடம்பெறும், மிகவும் பிரமாண்டமாக இந்த விழாவில் நடைபெறவுள்ளது. இதில் நான் ஒரு அங்கமாக இருப்பது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழர் பெருமையை விளக்கும் 3D நிகழ்ச்சி.. பிரதமர் படம் கேட்டவர்களுக்கு ‘படம் போட்டு’ காண்பித்த முதல்வர் !