Tamilnadu

"MLA ஆவதற்கு முன்பே வீடும், காரும் வாங்கியவர் கலைஞர்.." - பொய் செய்தி பரப்புபவர்களுக்கு இயக்குநர் பதிலடி!

முத்தமிழறிஞர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த அமைதிப் பேரணியில், நாடாளுன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் பிரபல மேடை பேச்சாளரும், நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன், கலைஞரை குறித்து பெருமைமிகு வகையில் ஒரு மேடையில் பேசியதாவது,

"இந்தியாவில் எல்லா மாநிலத்திலும்தான் முதல்வர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாம் கலைஞரை மட்டும் ஏன் கொண்டாடுகிறோம் என்றால், அவர் முதல்வர் மட்டும் அல்லாமல் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார். 50 ஆண்டு காலமாக ஒரு கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

இவர் போல் வேறு தலைவர்கள் யாரேனும் இல்லையா என்று கேட்டால், இருக்கும் தலைவர்களில் கவிதை எழுதுபவர்கள் யாரேனும் இருப்பார்களா? ஒருவரோ இருவரோ இருப்பார்கள், அதிலும் கலைஞர் இருப்பார். சரி அதுமட்டுமா என்றால் திரைத்துறையில் கேட்டால், அதிலும் கலைஞர் இருப்பார். இப்படி எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவர்தான் கலைஞர். அதனால்தான் இன்றும் தமிழ்நாடு கட்சிகள் பாகுபாடுகளை எல்லாம் தாண்டி ஒருவரை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது.

கலைஞரை பற்றி சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தனது 20-வது வயதில், 1944-ஆம் ஆண்டு 'பழனியப்பன்' என்ற ஒரு நாடகத்தை எழுதினார். அதை ஒரு நாடக நடிகர் சங்கம் ரூ.100-க்கு வாங்கியது. அப்போது 100 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த 100 ரூபாயை வைத்துக்கொண்டு தான் திருவாரூரில் திராவிடர் கழக கூட்டத்தை நடத்தினார்.

இதன்பிறகு பல்வேறு கதைகளை எழுதி வந்த அவர், 1951-ம் ஆண்டு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். அதன்பின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 1955-ல் கோபாலபுரத்தில் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார். அப்போது அவருக்கு 33 வயது.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், 1957-ல் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னே சொந்தமாக காரும் வீடும் வைத்து இருந்த கழக நிர்வாகிகளில் கலைஞரும் ஒருவர். இவையெல்லாம் அவர் எழுதியே சம்பாதித்து வாங்கியது." என்று பெருமிதத்துடன் கூறினார்.

Also Read: மக்களே உஷார்.! SWIGGY ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்.. LOAN APP மூலம் நூதன முறையில் பண மோசடி !