Tamilnadu

மீண்டும் அதிகாரிகளுடன் வம்பு செய்த நடிகை மீரா மிதுன் - இரண்டாவது பிடி வாரண்ட்.. விரைவில் கைது?

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். அதன் பின்பு இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ். அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் நண்பர் ஷாம் அபிஷேக் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகிய இருவர் ஆஜராகி இருந்தனர். ஆனால் மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை

இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம் சாட்டபட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது என தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் இருந்து வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ஏற்கனவே இதேபோல தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் மார்ச் 23ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், இரண்டாவது முறையாக நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read: பட்டியலின மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது : தனிப்படை போலிஸாரிடம் தற்கொலை மிரட்டல்!?