Tamilnadu

"இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி " -தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்களவர் கடிதம் !

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.இந்த நிலையில், இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும்,மருந்து, பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும் தமிழ்நாடு அரசு உதவும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சென்னையிலிருந்து கப்பலில் கடந்த மே 18 ஆம் தேதி ரூ. 32.94 கோடி மதிப்பிலும், 2ஆம் கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து ரூ. 67.70 கோடி மதிப்பிலும் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

கடந்த மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து 3ஆம் கட்டமாக விடிசி சன் என்ற கப்பலில் ரூ. 54 கோடி மதிப்பிலான 16,500 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 14 கோடி மதிப்பிலான 50 டன் உயிா் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பிலான 16,800 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன. வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு இந்த உதவி பெரும் உத்வேகமாக அமைந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த செயலுக்கு இலங்கை பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் "சபரகமுவா மாநிலத்தின் கேகாலை சேர்ந்த 63 வயது சிங்களரான நான் புத்த மதத்தை பின்பற்றுபவன். இந்த கடினமான சூழலில் அரிசி வழங்கியதற்கு உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி.

இதய நோயாளிகளான நானும், என் மனைவியும் 10 கிலோ அரிசி பையை பெற்றுள்ளோம். நாட்டிலுள்ள சூழலால் அன்றாட வருமானத்தை இழந்துள்ளோம். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்களுக்கு மிக்க நன்றி.

இலங்கை மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி. அன்புடன், விஜிதா விக்கிரமசிரி" என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: "நமது அரசு சட்டத்தின் அரசாக, சமூகநீதி அரசாக செயல்பட்டு வருகிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !