Tamilnadu

"நாங்கள் உங்களிடமிருந்து கத்துக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசை புகழ்ந்து தள்ளிய ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு !

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், ஜூலை 28-ம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடரில், 180க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.

இந்த போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. போட்டியில் பங்குபெறும் அனைத்து நாட்டினரும் தங்கள் கோடியை மற்றும் நாட்டின் பெயர் பொருந்திய பதாகைகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர்.

மேலும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. செஸ் கட்டத்தின் இருக்கும் 8 கட்டங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவின் 8 மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களை நடன கலைஞர்கள் நடனமாடி வந்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த விழாவில், லிடியன் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சியை வந்திருந்த அயல்நாட்டு போட்டியாளர்கள் தங்களை மெய்மறந்து ரசித்தனர். மேலும் தமிழன் பெருமையை எடுத்துசொல்லப்பட்ட நிகழ்ச்சி வெகுவாக பாராட்டப்பட்டது.

கலைநிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் உபசரிப்பிலும் எந்த குறையும் இல்லை என்று அயல்நாட்டு வீரர்கள் தங்கள் சமூக வலைதளபக்கத்தின் வாயிலாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

2 ஆண்டுகள் திட்டமிட்டு நடத்தவேண்டிய ஒரு தொடரை வெறும் 4 மாதத்தில் வெகுசிறப்பாக நடத்திய காட்டிய தமிழக அரசை பல்வேறு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், அடுத்ததாக 2014ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் ஹங்கேரியும் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டை வெகுவாறு பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக ஹங்கேரி செஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராபர்ட் கப்பாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். "எங்கள் நாட்டில் அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து அறிந்துகொள்ள எங்கள் அணி இந்த போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டது"

இந்த முறை சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளது. போட்டி குறித்து சென்னையின் கடைக்கோடி மக்களுக்கும் தகவலை அரசு கொண்டு போய் சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது குறித்து நாங்கள் நிறைய கற்று வருகிறோம். தற்போது இந்த கற்றலில் பாதி தொலைவில் இருக்கிறோம். போட்டி முடிவதற்குள் முழுமையாக கற்றுக்கொள்வோம்" என கூறியுள்ளார்.

Also Read: 4 ஆண்டு வேலையை, 4 மாதத்தில் முடித்த தமிழ்நாடு அரசு.. செஸ் ஒலிம்பியாட் சென்னைக்கு வந்தது எப்படி ?