Tamilnadu

குறைதீர்வு கூட்டம்: தரையில் அமர்ந்து விவசாயியின் கோரிக்கையை கேட்ட கலெக்டர்.. -திருப்பத்தூரில் நெகிழ்ச்சி!

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டரே நேரடியாக சென்று அவர்களிடம் இருந்து குறை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார். சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்ற கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து மனுக்கள் மீதான உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அங்கு கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த விவசாயி ஒருவர், பட்டென்று கலெக்டர் காலில் விழுந்தார். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, கலெக்டர் அவரிடம் எழுந்து தங்கள் கோரிக்கையை கூறுமாறு கேட்டுக்கொண்டபோதும், விடாப்பிடியாக தரையில் அமர்ந்த விவசாயி எழுந்திருக்கவே இல்லை.

பின்னர், அவரிடம் இருந்து குறை கேட்பதற்காக, கலெக்டர் அமர் குஷ்வாஹாவும், விவசாயின் முன்பு தரையில் அமர்ந்து குறையை கேட்டறிந்தார். அப்போது விவசாயி, "எனது பெயர் நாராயணசாமி. வாணியம்பாடி அருகே எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் இருந்தது. அதே பகுதியை சேர்ந்த வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டிருந்தேன். அந்த இடத்தை போலி பட்டா தயாரித்து வேறு ஒருவருக்கு விற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும்” என்றார்.

அவரது மனுவை பெற்ற கலெக்டர், நேரடியாக வந்து ஆவணங்களை ஆய்வு செய்கிறேன்" என்று கூறி விவசாயியிடம் உறுதியளித்தார்.

சுமார் 5 நிமிடங்கள் வரை தரையில் அமர்ந்து விவசாயியிடம் கலெக்டர் குறை கேட்ட போது, அதை பார்த்துக்கொண்டிருந்த சக அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய்.. Youtube மூலம் கண்டுபிடித்த மகள் - மும்பையில் நெகிழ்ச்சி !