Tamilnadu

"தமிழ்நாட்டில் படித்த அனைவருக்கும் வேலை என்ற சூழலை உருவாக்குவோம்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கம் சார்பில், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வருமாறு:-

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்பு தொழில்துறை சார்பில் ஆறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி இருக்கிறது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே எனது முழுமுதல் விருப்பம் ஆகும்.

புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தமிழ்நாடு தலைசிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோள் காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் இந்த நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு நிதிநிலை வரலாற்றிலேயே முதல் முறையாக சுமார் 250 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் திட்டங்களை அறிவித்து அதை திறம்பட செயல்படுத்திக்கொண்டும் இருக்கின்றோம்.

அனைத்து அமைச்சர்களும், அனைத்து துறை அதிகாரிகளும் தொடர்ந்து தங்கள் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைக் கண்காணிக்க வேண்டும். தொய்வு இருந்தால் அதனை முடுக்கிவிட வேண்டும். வாரம் தோறு ஆய்வுக் கூட்டங்களை நான் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் நடத்துகிறேன் என்றால் அதற்கு இது தான் காரணம்.

முற்போக்கான திட்டங்கள் -தேவையான நிதி ஆதாரங்கள் -துறைகள் ஒருங்கிணைப்பு - தொடர் கண்காணிப்பு - ஆகிய நான்கும் இணையும் போதுதான் மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். இதில் ஒன்று பலவீனம் அடைந்தாலும் முழுப்பலனை பெற முடியாது.

அந்த வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். புத்தொழில்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதற்கான மனித வளத்தை உருவாக்க நான் முதல்வன் போன்ற திட்டங்கள் கைகொடுக்கும்.

படித்த அனைவர்க்கும் வேலைகள் - அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலைகள் - நிறுவங்களின் தேவைக்கு ஏற்ற பணியாளர்கள் - என்ற சூழலை தமிழகத்தில் உருவாக்குவோம். புத்தொழில் நாடாக - புத்தொளி நாடாகவும் தமிழகத்தை உருவாக்குவோம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அடுத்த திட்டங்கள் இதுதான்.. பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!