Tamilnadu
சினிமா பாணியில் திட்டமிட்டு பைனான்சியரை கொலை செய்த நண்பர்கள்.. கொலையாளி கொடுத்த ‘பகீர்’ வாக்குமூலம்!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் முருகவேல், (65) இவரது மகன் செந்தில்குமார், (39). இருவரும் வட்டிக்கும் பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தனர். செந்தில் குமார் தனது மனைவி ஜெயலட்சுமி, மகள், மகனுடன் கடலூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஜூன் 22-ந் தேதி இரவு 7 மணியளவில் வெளியே சென்ற செந்தில் குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. பாகூர் அருகே குருவிநத்தம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாகூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கொலை நடந்த அன்று செந்தில்குமார் மொபைல் போனிற்கு, சோரியாங்குப்பம் முதியவர் ஒருவரின் மொபைல் போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. முதியவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை போலிஸார் ஆய்வு செய்தனர்.
அதில், முதியவரிடம் போன் வாங்கி பேசியது, செந்தில்குமாரின் நண்பரான குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கண்ணன் (40), என்பது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரும், அவரது நண்பர் செல்வமும் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களை போலிஸார் கைது செய்தனர்.
பின்னர் போலிஸில் கண்ணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ”நான் பாத்திரக்கடை வைத்து நடத்தி வந்தேன். நானும், செந்தில்குமாரும் நீண்ட நாள் நண்பர்கள். தொழிலில் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்படவே கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தேன்.
இதனால் எனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடன் சேர்ந்து, செந்தில்குமாரை கடத்தி, அவரது தந்தையிடம் ரூ.20 லட்சம் பறித்து கடனை அடைத்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என திட்டம் திட்டினேன். போலிஸாரிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக எனது மொபைல் போனை பழுது என கூறி, வடலூரில் உள்ள ஒரு மொபைல்போன் சர்வீஸ் சென்டரில் கொடுத்தேன்.
அதேபோல், மொபைல் போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு செல்வத்திடமும் கூறினேன். அன்று மாலை இருவரும் சோரியாங்குப்பம் வந்தோம். அங்கிருந்த முதியவரிடம் மொபைல் போன் வாங்கி, செந்தில்குமாருக்கு போன் செய்தோம். மது குடிக்கலாம் என கூறி வரவழைத்தோம். அவர் வந்ததும் மூன்று பேரும் மது குடித்தோம். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், செந்தில்குமாரை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்றோம்.
செந்தில்குமாருக்கு போதை தலைக்கேறி மயங்கி பின், அவரது மொபைல் போனில் இருந்து அவரது தந்தைக்கு போன் செய்து பணம் கேட்கலாம் என முடிவு செய்தோம். ஆனால் அதற்குள், செந்தில்குமாருக்கு போதை தெளிந்த நிலையில், மொபைல் போனை தர மறுத்தார்.
எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நானும், செல்வமும் சேர்ந்து, கற்களாலும், பீர் பாட்டிலாலும் செந்தில்குமாரை அடித்து கொலை செய்தோம். பின்னர் அவரது மொபைல் போன் மற்றும் மோதிரத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டோம்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!