Tamilnadu

“தமிழ்நாடு காவல்துறைக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.7.2022) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு காவல் துறைக்கு, குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- குடியரசுத் தலைவரினுடைய வண்ணக்கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழக காவல்துறை பெறுகிறது. அதனை வழங்குவதற்கு குடியரசுத் துணைத்தலைவர் வருகை தந்துள்ளார். இச்சிறப்பினை வழங்குவதற்காக வருகை தந்துள்ள குடியரசுத் துணைத்தலைவருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இது இரட்டை மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்குகிறது. தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே கிடைத்திருக்கக்கூடிய வரலாற்றுமிகு பெருமை இது! தனிப்பட்ட ஒரு காவலருக்குக் கிடைத்த பெருமை அல்ல இது, ஒட்டுமொத்தமாக அனைத்துக் காவலர்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை!

தமிழ்நாடு காவல்துறையின் குறிப்பிட்ட ஒரு சாதனைக்கு கிடைத்த விருது அல்ல, தமிழ்நாடு காவல்துறைக் காவலர்கள் 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் இது.

இரவு பகல் பாராது, வெயில் மழை பாராது, ஏன், தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஆற்றிய உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. இப்போதும் இந்த இடத்தில் நம் மனக்கண் முன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் நிற்கிறார்.

இதே விருதை இதற்கு முன் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்தவர் நம் நெஞ்சம் எல்லாம் நிறைந்த கலைஞர். முத்தமிழறிஞர் கலைஞர் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் நாள் குடியரசுத் தலைவரின் கொடியினை தமிழ்நாடு காவல்துறைக்குப் பெற்றுத் தந்தார்.

தமிழக காவல்துறையானது தனக்குத்தானே சல்யூட் அடித்துக் கொள்ள வேண்டிய பெருமை இது. தமிழக காவல் துறையானது தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக்கொள்ள வேண்டிய சிறப்பு இது. பழம்பெரும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856-ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாநகரில்தான் முதன்முதலில் காவல்துறை வரலாறு தொடங்கியது. 1859-ஆம் ஆண்டு மதராஸ் மாகாண காவல்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. எனவே நமது காவல்துறை என்பது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரியான காவல் துறை!

பொது அமைதியைக் காப்பது - குற்றங்களில் இருந்து மக்களைக் காப்பது - சட்டங்களைக் காப்பது - பொது மக்களைக் காப்பது, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் மக்களைக் காப்பது! இதுதான் உங்களது முழு முதல் பணி!

இத்துறையில், முதல் முதலாக இந்தியாவிலேயே மகளிர் காவலர்களை நியமித்தவர் முதலமைச்சர் கலைஞர். 1973-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் உஷா, ஒரு தலைமைக்காவலர் மற்றும் 20 காவலர்கள் சென்னை மாநகரில் பணியமர்த்தப்பட்டனர். இன்று காவல்துறையில் 1 டி.ஜி.பி, 2 ஏ.டி.ஜி.பி, 14 ஐ.ஜி முதலிய பெண் காவல் உயரதிகாரிகளும், 20,000 பெண் காவலர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள்.

பெண்களுக்குக் காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. அதை அளித்தவர் கலைஞர் அவர்கள் தான்!

கைரேகைப் பிரிவு,

மோப்ப நாய் பிரிவு,

புகைப்படப் பிரிவு,

கணினித் தொழில்நுட்பப் பிரிவு,

கடலோரப் பாதுகாப்புப் பிரிவு,

மகளிர் கமாண்டோ பிரிவு எனப் பல்வேறு பிரிவுகள், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டுமல்ல, முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது!

அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கடந்த 30 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டு, பல பதக்கங்களை வென்று வருவதை நினைக்கும்போது ஒவ்வொரு தமிழ்நாட்டவரும் பெருமை கொள்ளக்கூடிய அளவில் அமைந்திருக்கிறது.

கடந்த ஓராண்டு காலமாக காவல்துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது. மதக்கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களைப் பீதிக்குள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை.

தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் அமைதி நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு இல்லை, கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லை. காவல்நிலைய மரணங்கள் குறைந்துள்ளன. காவல் நிலைய மரணம் 2018-ஆம் ஆண்டு 17 மரணங்கள் என்று பதிவானது, 2021–ஆம் ஆண்டு 4 மரணங்களாக குறைந்துள்ளது.

குறைந்துள்ளது என்றுதான் சொன்னேனே தவிர, முற்றிலும் இல்லை என்று நான் சொல்லவில்லை. காவல் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தித் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும்.

சில சிறு குற்றம் நடந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது. பாலியல், போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியாக வேண்டும். கடந்த ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை வாங்கிப் பார்த்தேன். 2021-ஆம் ஆண்டு மட்டும் சுமார் 12 இலட்சம் பேர் காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள்.

7 லட்சத்து 56 ஆயிரத்து 753 குற்ற வழக்குகள் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. இவற்றில் தொடர்புடைய 9 லட்சத்து 27 ஆயிரத்து 763 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் காவல்நிலையங்களில் விசாரிக்கப்பட்டு முடிவு காணப்பட்டுள்ளது. இந்த 7.76 இலட்சம் மனுக்களில், 75 ஆயிரம் மனுக்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்டவை. இத்தனை பேர் காவல் நிலையங்களை நாடிச் செல்கிறார்கள் என்று சொன்னால், மக்கள் காவல்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், நன்மதிப்பும் காரணம் என்று நமக்குத் தெளிவாகிறது.

காவல்துறையினர் பெரும் சேவையை மக்களுக்கு செய்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகிறது. அமைதியான மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால்தான் ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இவை அனைத்தும் தமிழகம் அமைதியாக இருக்கிறது என்பதன் அடையாளங்கள் ஆகும்.

மக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். காவலர்களை நாங்கள் பாதுகாக்கிறோம். காவலர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காகத்தான் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில், காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருவோம் என உறுதி அளிக்கிறேன்.

காவல் அதிகாரிகளும், காவல் ஆளிநர்களும் கவலையின்றிப் பணியாற்றுவதற்கான சூழல்களை அமைத்துத் தர இந்த அரசு தயாராக உள்ளது. குடியரசுத் தலைவரின் விருது பெற்றிருக்கும் தமிழக காவல்துறையினர் தங்கள் காக்கிச் சட்டையில் அதன் அடையாளமான கொடியினை அணிந்து செல்வார்கள். ‘நிஸான்’ என்றழைக்கப்படும் இந்தச் சின்னம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். அதோடு காவலர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்நாடு காவல்துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குநர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களைக் காப்போம்! மகத்தான மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்திக் காட்டுவோம்! நன்றி ! வணக்கம் !” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!