Tamilnadu
OLA, UBER வாடகை டாக்ஸி சேவை - அரசே இயக்க நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!
இந்தியாவில் ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையில் முன்னணி நிறுவனங்களாக ஓலா, உபர் ஆகிய இரு நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. ஆனால் சமீப காலமாக இந்த இரு நிறுவனங்கள் மீதும் அதிக அளவிலான புகார்கள் எழுந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையை அரசே மேற்கொள்ளும் வகையில் புதிய செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அரசு நிறுவனங்கள் தொடர்ந்து தனியார் மயமாகிவரும் நிலையில், தனியார் கோலோச்சும் இந்த துறையில் இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா நுழைந்துள்ளது.
கேரள மாநில தொழிலாளர் துறை சார்பில் "கேரள சவாரி" என்று பெயரிடப்பட்ட ஆன்லைன் டாக்ஸி வாடகை சேவையானது ஆட்டோ-டாக்ஸி நெட்வொர்க்குகளை இணைத்து தொடங்கப்படவுள்ளது. மலிவு விலையில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் பிரச்சனை இல்லாத பயணத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த சேவை தொடங்கப்படவுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கப்படும் இந்த திட்டத்தால் வாடகை டாக்ஸி உரிமையாளர்களுக்கு 20 % அதிக லாபம் கிடைக்கும் என்றும், பொதுமக்களின் செலவுகளும் கணிசமாக குறையும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த துறையில் தனியார் நிறுவனங்கள் அதிகம் லாபம் பார்க்கும் நிலையில், அந்த லாபத்தை அரசுக்கு திருப்பும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 'கேரள சவாரி' என்னும் திட்டத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி வரம்புக்குள் இருக்கும் 500 ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்கள் இத்திட்டத்தின் முதல் டிரைவர் பார்ட்னர் ஆக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் Ola,Uber வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தும் தமிழ்நாடு அரசு தற்போது பக்கத்துக்கு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் திட்டங்களையும் ஆராய்ந்து அமல்படுத்த முடிவு செய்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுவருகிறது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!