Tamilnadu
4 ஆண்டு வேலையை, 4 மாதத்தில் முடித்த தமிழ்நாடு அரசு.. செஸ் ஒலிம்பியாட் சென்னைக்கு வந்தது எப்படி ?
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த போட்டியின் சாராம்ஸமே செஸ் விளையாட்டில் ஆர்வமுடைய போட்டியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். 1927 ஆம் நடைபெற்ற இந்த போட்டியை லண்டன் நடத்தியது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டியானது, இரண்டாம் உலக போரின்போது (1939 - 1945) ஆண்டுகால கட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
சுமார் 7 வருடம் நடைபெறாத இந்த போட்டி, மீண்டும் 1950 ஆம் ஆண்டு யூகோஸ்லோவியா நடத்தியது. அதன் பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாடும் இந்த போட்டியை நடத்தி வந்தது.
இப்படி இருக்க கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காரணமாக இந்த போட்டி நடைபெறாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் 2020-2021 ஆண்டு நடைபெற்றது. இதில் தங்கப்பதக்கத்தை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கைப்பற்றியது.
சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெரும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, எந்த நாடு நடத்தவேண்டும் என்பதை 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் இந்தாண்டு நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதலில் மாஸ்கோவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மாஸ்கோவில் நடத்த முடியாது என்று சில மாதங்களுக்கு முன்பு உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) அறிவித்தது.
இதனால் இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி வேறு எந்த நாடு நடத்தும் என்று உலகளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதை உணர்ந்த 'அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பின்' செயலாளர் பரத்சிங் சவுஹன், உலக செஸ் கூட்டமைப்பிடம் (FIDE) ஏலத்தில் பங்குபெற விருப்பத்தை பிப்ரவரி மாதம் தெரிவித்தார். அப்போது இந்த தொடரை நடத்துவதற்காக டெல்லி, குஜராத், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
அதில் இந்த அறிய வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. ஆனால் இந்த தொடர் நடத்துவதற்கான பணமும் அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இதற்காக 10 மில்லியன் டாலர்கள் (75 கோடி) பணத்திற்கும் உறுதியளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணையை வெளியிட்டார்.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்களில் சுமார் 1200 அறைகள் ஏலத்திற்கு முன்பாகவே பிளாக் செய்யப்பட்டு இதற்கான வேலைகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.
இதையடுத்து வேறு எந்த நாடும் முனைப்பு காட்டாததால், செஸ் ஒலிம்பியாட் ஏலத்தை இந்தியா வென்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது உலக செஸ் கூட்டமைப்பு. இதனால் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர், தமிழ்நாடு நடத்தும் வாய்ப்பை தட்டி தூக்கினார் முதலமைச்சர். இந்த விஷயங்கள் எல்லாம் வெறும் 20 நாட்களில் நடந்து முடிந்ததை கண்ட மற்ற மாநிலங்கள் வாயடைத்து போனது.
இவ்வளவு நடந்திருக்க, இருப்பினும் உலக செஸ் கூட்டமைப்புக்கு இந்த போட்டியை இந்தியாவின் தலைநகரில் நடத்தாமல் தமிழ்நாட்டில் ஏன் நடத்துகிறீர்கள் என்று சந்தேகத்துடன் கேள்வியெழுப்பினர். பின்னர் தமிழ்நாட்டில் இருந்த ஹோட்டல் அறைகள் முதல் போட்டி நடக்க போகும் இடம் வரை எல்லாவற்றையும் வீடியோ எடுத்து அனுப்பியதும் FIDE-விற்கு நம்பிக்கை வந்தது.
இதனிடையே தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அதற்கான ஏற்பாடுகளை முனைப்புடன் செய்து வருகிறது. அதன்படி செஸ் ஒலிம்பியாட் ஜோதி, இந்தியா முழுவதும் சுற்றி நேற்று மாலை சென்னை வந்தடைந்தது. மேலும் இன்று (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த போட்டி தொடரில் பங்கு பெற 187 நாட்டிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை மாமல்லபுரத்தில் நடக்கும் இந்த போட்டி தொடரில், உலகளவில் இருக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் பலரும் பங்குபெற்றுள்ளனர். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தங்களின் அணியில் அதிகபட்சமாக 5 வீரர்கள் பங்கேற்கமுடியும். ஆனால் எந்த நாடு இந்த போட்டித்தொடரை நடத்துகிறதோ, அந்த நாடு மட்டும் இரண்டு அணிகளாக அதாவது 10 வீரர்களை பங்குபெறச் செய்யலாம்.
அந்த வகையில் இந்தியாவுக்கு 2 அணிகளை களமிறக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அதிக நாடுகள் இதில் பங்கேற்றதால் 3 அணிகளை களமிறக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. தற்போது இந்தியா சார்பில் 3 அணிகளாக, 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம் காண உள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஆலோசகராக செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எல்லாவற்றிக்கும் மேலாக இந்த போட்டித்தொடரை இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு தமிழ்நாடு அரசு வரவேற்பு பாடல், போஸ்டர்கள், நேப்பியர் பாலம் கலரிங் என விளம்பரப்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வருகை தந்த செஸ் வீரர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் வழங்கி சிறப்பித்து வருகிறது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த சிறப்பு முயற்சி இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இன்று தொடங்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்கவிழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!