Tamilnadu

“தமிழ்நாடு அரசிடம் மன்னிப்பு கோர வேண்டும்.. சிறு செய்திகளை பிரச்சினையாக ஆக்குவது தவறு” : ஐகோர்ட் அதிரடி!

44-வது போட்டி செஸ் ஒலிம்பியாட்டின், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட். 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த போட்டியில், உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் அதன் தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

மேலும் எங்கு திரும்பினாலும், இந்த போட்டியின் லோகோவான வேட்டி-சட்டையுடன் கூடிய செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் குதிரை காய் வணக்கம் தெரிவிப்பதுபோல, தம்பி சின்னங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விளம்ரங்களிலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.ஜ.க சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாணை இன்று நடைபெற்ற போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலை படுத்த வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கெல்லாம் பெருமை. ஒவ்வொருவரும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் இதில் சிறு சிறு செய்திகளை பெரிய பிரச்சினையாக ஆக்குவது தவறு. மனுதாரர் தமிழ்நாடு அரசிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

பிரதமர் படத்தை விளம்பரங்களில் போடுவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, இன்றைய நாளிதழில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

Also Read: ”படத்தில் இருப்பது காணாமற்போன பேனா அல்ல; கலைஞரின் கை வாள்!” - அமைச்சர் தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி !