Tamilnadu
“காலை உணவை யாரும் தவற விடக்கூடாது.. பள்ளி மாணவர்களுக்கு தந்தையாக அறிவுரை” : முதலமைச்சர் உருக்கம் !
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.7.2022) சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு” தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் பள்ளிக் கூடங்களுக்குச் செல்வதைப் போன்ற உற்சாகம் வேறு நிகழ்ச்சிகளில் நிச்சயமாக அமைவது இல்லை. நான் நீண்ட நேரம் உங்களிடத்திலே உரையாற்ற முடியாத சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அண்மையிலே கொரோனா என்ற தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு, இரண்டு மூன்று நாட்களாக சில நிகழ்ச்சிகளுக்கு மாத்திரம் அதிலும் குறிப்பாக சென்னையில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு மாத்திரம் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
நான் பேசுகின்ற பேச்சிலேயே உங்களுக்குத் தெரியும், தொண்டை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று. தொண்டை பாதிக்கப்பட்டிருந்தாலும், தொண்டில் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நான் என்னுடைய பணியை நிறைவேற்ற முன்வந்திருக்கிறேன் தவிர வேறு அல்ல.
குழந்தையின் புன்சிரிப்பு தரும் புத்துணர்ச்சியும் பிள்ளைச் செல்வங்களின் பேச்சு தரும் உற்சாகமும் - மருந்து மாத்திரைகளை விட வலிமையானவை.
கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நான் - அதிலிருந்து சிறிது குணமடைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருந்தாலும், உடல் சோர்வு என்பது சற்று இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்கும்போது அதெல்லாம் பறந்து போய்விடுகிறது, முழுநலம் பெற்றதாக நான் உணர்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குறிப்பாக நம்முடைய மாணவச் செல்வங்கள் காலையிலேயே எல்லோரும் சீக்கிரமாகவே புறப்பட்டு இங்கே வந்திருப்பீர்கள். அப்படி வந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்களைப் பார்த்து நான் கேட்கிற ஒரே கேள்வி, நீங்கள் எல்லாம் காலை உணவு சாப்பிட்டீர்களா? அங்கிருக்கக்கூடிய மாணவச் செல்வங்களைப் பார்த்து கேட்கிறேன், காலை உணவு சாப்பிடாதவர்கள் யாராவது இருந்தால் கையை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால், இந்த மேடைக்கு நான் வருவதற்கு முன்னால் ஒரு வகுப்பறைக்குச் சென்று அங்கிருக்கக்கூடிய மாணவச் செல்வங்களோடு கலந்து பேசினேன். ஒரு ஐந்தாறு மாணவியர்களிடத்தில் நான் சில கேள்விகளைக் கேட்டேன். அப்படி கேட்கிறபோது, நீங்கள் எந்தப் பகுதியிலிருந்து வருகிறீர்கள்? எப்படி வருகிறீர்கள், காலையில் உணவு சாப்பிட்டீர்களா? என்று 5 பேர்களிடத்தில் கேட்டேன். 5 பேர்களில் 3 பேர் காலையில் சாப்பிடாமல் வந்தார்கள் என்ற செய்தியை சொன்னார்கள்.
இது தான் உண்மை. இது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நான் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றபோது, பலமுறை சாப்பிடாமல் பள்ளிக்கு போயிருக்கிறேன். ஏனென்றால், பஸ் பிடிக்க வேண்டுமென்பதால், அது ஒரு சூழ்நிலை. இது நகரப்பகுதி, ஆனால், கிராமப் பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கிறபோது, எந்த அளவுக்கு அவர்கள் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளமுடியும்.
ஏன் இந்த கேள்வியை நான் கேட்டேன் என்றால், பெரும்பாலான பிள்ளைகள் காலையில் புறப்படும்போது சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதுவும் நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவே கூடாது.
டாக்டர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், காலையில்தான் அதிகமாக சாப்பிடவேண்டும். மதியம் அதைவிட கொஞ்சம் குறைவாகவும், இரவில் இன்னும் கொஞ்சம் குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்று டாக்டருடைய அறிவுரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு எல்லாம் எப்படி நடக்கிறது என்றால், காலையில் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிகமாகவும், வழக்கமாக சாப்பிடுகின்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அது மாதிரி இருக்கக் கூடாது. அதிலும் கட்டாயமாக, உறுதியாக காலை உணவை யாரும் தவறவிடக் கூடாது.
அதிகாலையில் அவசர அவசரமாக நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பி வரவேண்டிய சூழல் இருப்பதை மனதில் வைத்து அதிலும் குறிப்பாக, 1வது முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நம்முடைய தமிழ்நாடு அரசு தொடங்கப் போகிறது.
அதற்கான அரசாணையில் நேற்று தான் நான் கையெழுத்து போட்டு வந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் மூலமாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திராவிட இயக்கத்தின் தாய்க் கட்சியான நீதிக்கட்சித் தலைவராக இருந்த சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில்தான் முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதுவும் ஆயிரம் விளக்கில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. என்னை முதன்முதலாக தேர்ந்தெடுத்த தொகுதி ஆயிரம் விளக்குத் தொகுதிதான்.
வெள்ளுடை வேந்தர் தியாகராயர், பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த திட்டமானது இன்றைய அரசால் அடுத்த வளர்ச்சியை அடையப் போகின்றது. மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டியை நாம் வழங்கப் போகிறோம்.
மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையை முதலில் பெற்றாக வேண்டும். இந்த தன்னம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்! படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்கானத்தான் இந்த பயிற்சி முகாம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
மன நலன் - உடல் நலன் - ஆகிய இரண்டும் சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும். எப்போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோர்வாக இருக்கக் கூடாது. சோம்பேறித்தனம்தான் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை! எதையும் நாளைக்குப் பார்த்துக்கலாம், நாளைக்கு படிச்சிக்கலாம், நாளைக்கு எழுதிக்கலாம் என்று தள்ளிப் போடாதீங்க.
வாழ்வில் எதையும் சுறுசுறுப்பாக எதிர்கொள்ளக்கூடிய அந்த உணர்வு உங்களுக்கு வந்தாக வேண்டும். அதற்கு உங்கள் உடல் நலத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும், பார்த்துக் கொள்ளவேண்டும். நல்ல உடற்பயிற்சியும், நல்ல எண்ணங்களும்தான் இதற்கு அடிப்படையாக அமையும். மிகச் சிறப்பான பள்ளி உங்களுக்கு அமைந்துள்ளது.
இந்தப் பள்ளிக்கு ஒரு பெரிய பாரம்பரியம் இருக்கிறது. இந்தப் பள்ளி என்பது பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 1962-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி என்பது பாராட்டுக்குரிய ஒன்று. அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆக, இந்த பள்ளியில் ஏறக்குறைய நாலாயிரம் பிள்ளைகள் படிக்கிறார்கள்.
அட்மிஷன் முதல் நாள் அன்றே ஹவுஸ் புல் போடக்கூடிய பள்ளியாக இந்த பள்ளி விளங்கிக் கொண்டு இருக்கிறது என்பது மிகச் சிறப்புக்குரிய ஒன்று. அப்படிப்பட்ட பெயர் பெற்ற பள்ளிதான் இந்த அசோக்நகர் பள்ளி. திறமையான ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன கவலை இருக்கிறது? படிப்பைத் தவிர மற்ற வீண் சிந்தனைகள் எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.
நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள், இந்த மூன்றும் தான் நான் உங்களுக்கு சொல்வது. இப்படி சொல்கிறேன் என்றால் நான் முதலமைச்சராக என்ற அதிகாரத்தில் இருந்து சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். உங்கள் அப்பாவாக, அம்மாவாக உங்களுடைய பெற்றோரில் ஒருவனாக இருந்து இந்த வேண்டுகோளை இங்கே இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு நான் எடுத்து வைக்க விரும்புகிறேன்.
பள்ளிக்கூடங்கள், பாடங்கள் நடத்தும் கூடங்களாக மட்டுமில்லாமல் அறிவு - ஆற்றல் - மனம் - உடல் ஆகிய அனைத்தையும் வளப்படுத்த வேண்டும். பாதி பெற்றோர்களாக, ஆசிரியர்களும் - பாதி ஆசிரியர்களாக, பெற்றோர்களும் செயல்படவேண்டும்.
கல்விக் கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக அது மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் அரசு நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் எல்லோரும் எல்லாவற்றையும் அடைவதற்கு அனைவரும் அனைத்துத் தகுதிகளையும் பெற்றாகவேண்டும்.
எனது மாணவக் கண்மணிகள் முகத்தில் நான் உற்சாகத்தை பார்க்கிறேன். மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். மலர்ச்சியைப் பார்க்கிறேன். வானம் தொட்டு விடும் தூரம்தான். உங்களால் முடியும், உங்களால் மட்டுமே முடியும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!