Tamilnadu

கள்ளக்குறிச்சி சம்பவம் : பொய்செய்தி பரப்பிய 32 Youtube சேனல்கள்.. என்ன நடவடிக்கை? : SP முக்கிய தகவல் !

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.

இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலை தளத்தில் பதிவிட்ட பலரை தமிழகமெங்கிலும் போலிஸார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூறியுள்ள அவர், இந்தச் சம்பவத்தில் போலியான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 32 யூடியூப் பக்கங்கள், சமூக வலைத்தள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் தவறான தகவல்களை பரப்பியவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொய் செய்திகளை பரப்பிய யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி எஸ். பி கூறியுள்ளார்.

Also Read: கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன் : கர்நாடகாவில் அதிர்ச்சி !