Tamilnadu
“அரைக்கால் வேக்காட்டுத்தனமாக அறிக்கை விட்டுத்திரிய வேண்டாம்..” : பழனிசாமி - அண்ணாமலைக்கு சிலந்தி பதிலடி !
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணமும் - அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் துயரமானதுதான்!
மாநில காவல்துறை கடும் போராட்டத்துக்கு இடையே உயிர்ப்பலி எதுவும் ஏற்படாத வகையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது - பாராட்டப்பட வேண்டியதுதான். இன்னும் சிறிது முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கை எடுத்திருந்தால், பொருட்சேதங்களையும், காவல் துறையினருக்கு ஏற்பட்ட இரத்தக் காயங்களையும் தடுத்திருக் கலாம் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்!.
இந்தச் சம்பவம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்போது, என்னதான் காவல்துறை எச்சரிக்கையாக இருந்தாலும், அசம்பாவிதங்கள் நடந்து விடுவது இயற்கை! இதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியும், முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலையும் நன்கு அறிவர்! இருந்தும், நடந்து விட்ட விரும்பத்தகாத செயல்கள் குறித்து இருவரும் தெரிவித்துள்ள கருத்துக்கள்தான், அவர்கள் எத்தனை கீழ்த்தரமாக அரசியல் நடத்த நினைக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன!
தனது கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்த பழனிசாமி, செய்தியாளர்களிடம், கள்ளக்குறிச்சி கனியாமூரில் நடந்த சம்பவங்கள் - தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. உளவுத்துறை சரியாகச் செயல்படவில்லை. செயலற்ற அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது; என்றெல்லாம் தன் நிலை மறந்து பேட்டி தந்துள்ளார். தான் தரும் பேட்டி எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும் என்ற குறைந்தபட்சத் தெளிவுகூட இல்லாது பழனிச்சாமி கருத்தறிவித்துள்ளார். எந்தப் பழனிச்சாமி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் தெரியுமா?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறு நாட்கள் அமைதியாகப் போராடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்களைப் பலிகொண்ட ஆட்சியின் முதலமைச்சராக இருந்த பழனிச்சாமிக்கு சட்டம் - ஒழுங்கு பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது - எனக் கேட்பார்களே; என்பதை உணராத பழனிச்சாமிதான் இப்படிப் பேட்டியளித் திருக்கிறார்.
2018 மே மாதம் 22-ந் தேதி அமைதியாகத் தொடங்கி, ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற போராட்டத்தினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியதன் விளைவாக அந்தப்பகுதியே வன்முறைக் களமாக மாறியது. போலிசார் எந்தவித முறையான எச்சரிக்கையுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தி, 17 வயது பள்ளி மாணவன் உள்பட 13 பேரை சுட்டு வீழ்த்தினார்களே; அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது எனப் பொறுப்பேற்றுக் கொண்டாரா; அன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி?
மக்கள் இப்படிக் கேட்பார்களே என்ற எண்ணம், பேட்டி தருமுன் பழனிச்சாமிக்கு ஏற்பட்டிருக்க வேண்டாமா? உடல்நலம் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், கள்ளக்குறிச்சியில் நடந்துவிட்ட அசம்பாவிதச் சம்பவம் குறித்து வருந்தி, “தவறு செய்தவர்கள் மீது உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்; எனவே அமைதி காத்திடுங்கள்!” - என வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி, உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை அதிகாரியையும் கள்ளக்குறிச்சிக்கு உடனடியாக அனுப்பிவைத்து, அங்கே அமைதியைத் திரும்பக்கொண்டுவர எல்லா வழிவகைகளையும் மருத்துவ மனையிலேயே இருந்து மேற்கொண்டுள்ளார், தமிழகத்தின் இன்றைய முதல்வர்! ஆனால் பழனிச்சாமியின் அரசாங்கத்தில் அன்று என்ன நடந்தது?
காவல்துறை, உளவுத்துறை இத்யாதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சர், அன்று தூத்துக்குடி கலவரம் குறித்து என்ன கூறினார். கலவரம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து தொலைக் காட்சியைப் பார்த்துத் தெரிந்து கொண்டதாகக் கூறவில்லையா? அந்தப் பழனிச்சாமியால் எப்படி இப்படியெல்லாம் வெட்கமின்றி பேட்டி கொடுக்க முடிகிறது என்று மக்கள் கருதமாட்டார்களா?
பேட்டிதருமுன் இந்த நினைப்பு அவருக்கு வந்திருக்க வேண்டாமா? ஒருமுறை அத்வானி குறித்து பேட்டியளித்த ஜெயலலிதா, அவருக்கு Selective Amnesia (தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றில் மறதி) இருப்பதாகக் குறிப்பிட்டார். ஜெயலலிதா குறிப்பிட்ட அந்த ஞாபக மறதி வியாதி அத்வானிக்கு இருந்ததோ இல்லையோ; நமது பழனிச்சாமிக்கு அதிகமுள்ளது என்பதையே அவரது பேட்டி எடுத்துக்காட்டுகிறது!
அடுத்து, தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறினார்; நல்ல வேளையாக அந்தப் பேட்டியின்போது பழனிச்சாமியை சூழ்ந்து நின்ற அவரது ஆதரவுக் கூட்டத்தின் காமரா பதிவின் முன் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தென்படவில்லை. பழனிச்சாமி இப்படி கூறியபோது சட்டமன்ற உறுப்பினராக மட்டுமின்றி, துணை சபாநாயகருமாக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், “என்ன இந்த மனிதன் இப்படி ‘சேம் சைட் கோல்’ அடித்துக்கொண்டிருக்கிறார். என்று கருதமாட்டாரா? பாலியல் கொடூரங்களின் உச்சகட்ட கொடூரம் பொள்ளாச்சி யில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதே; அதை எப்படி பழனிச்சாமி மறந்தார்? ஒன்றா இரண்டா? பத்தா இருபதா? ஏறத்தாழ 200க்கு மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக ஊடகங்கள் எல்லாம் ஒரு பெரிய மர்ம நாவல் போல, அதனை எழுதியதே: சிந்துபாத் கதை போல முடிவில்லாது தொடர்ந்து கொண்டேயிருந்ததே.
தோண்டத் தோண்ட முடிவேயிருக்காதா என எண்ணுமளவு, வீடியோ ஆதாரங்களும், அதிலே “அண்ணா விட்டு விடுங்கள்” - என்ற இளம் பெண்களின் அலறலும் கேட்டனவே; அ.தி.மு.க.வின் பொறுப்பில் இருந்தவர் களெல்லாம் கைதாயினரே!
2013 லிருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ஆறு வருடங்கள் இந்த அட்டூழியங்கள் நடந்ததே; அப்போது நடந்த அவல ஆட்சியில் துப்பறியும் துறை என்று போலிசில் இருந்ததல்லவா? என்றெல்லாம் கேள்வி எழுமே” - என, பேட்டியின் போது பழனிச்சாமி அருகில் இருந்தவிபரம் தெரிந்தவர்கள் எண்ணி இருக்கமாட்டார்களா?
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை எனப் பழனிச்சாமி கூறலாமா? 500க்குமேற்பட்ட இளம் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்த நாகர்கோவில் காசி, சுதந்திரமாக நடமாடியது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தானே; ஏன்; வேலியே பயிரை மேய்ந்தது போல, போலிஸ் உயர் அதிகாரி தனக்கு பாலியல் தொந்தரவு தர முயற்சித்ததாக ஒரு பெண் எஸ்.பி. புகார் தந்ததும் எடப்பாடி ஆட்சியில்தானே!
தான் தந்த பேட்டி `பூமராங்` போல தன்னை நோக்கித்திரும்பி வந்து தாக்கும் என்பது கூட தெரியாத நிலையில், விவஸ்தை இன்றி விபரம் புரியாது பேசும் இந்த மனிதரை ஒத்தைத் தலைவராகக் கொண்டு எப்படி குப்பை கொட்டப்போகிறோமோ - எனப் பேட்டியின்போது அருகிலிருந்த, கொஞ்சம் விபரமுள்ள அரசியல்வாதிகளான கே.பி.முனுசாமி போன்றோர் நினைத்திருக்கக் கூடும்!
பழனிச்சாமிக்குத் தெரிந்தது அவ்வளவு தான்... அடித்தகாற்றில், தெருவில் கிடந்த இலை கோபுரத்தில் ஒட்டிக்கொண்டது போல, பெரும் பதவிகளில் ஒட்டிக் கொண்டவர் அவர்!
இன்னொரு அரசியல்வாதி இப்போது தமிழகத்தில் வலம் வருகிறார். அதிமேதாவி என்று தன்னைத்தானே கருதி கொள்ளும் அரைவேக்காடுகூட அல்ல; அரைக்கால்வேக்காட்டு அரசியல்வாதி அவர்!
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ‘டிவிட்’ செய்த அவர், இந்தச் சம்பவத்தால் ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்; காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர் என்றெல்லாம் கூறி, தனது ‘மேதா விலாசத்தை’ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்!
புதிதாக அரசியல் வேடம் கட்டியுள்ளதால், தனது பழைய போலிஸ் வேடத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் மறந்து பேசுகிறார். இவர் கருநாடகத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்த போது 2017ல் இவரது அதிகார எல்லைக்கு உட்பட்ட சிக்கமகளூரில் பாபா புதன்கிரி மலைப்பகுதியில் நடந்த மதக்கலவரத்தின் போது இந்தக் காவல்துறை அதிகாரி என்ன செய்தார்?
அந்த மலைக்கோவிலுக்கு பாபர் மசூதி விவகாரம் போல - இந்துக்களும், முஸ்லீம்களும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தனர். மாநில காங்கிரஸ் அரசு, “அந்த இடத்தை அயோத்தி போல வன்முறைக் களமாக ஆக்கமாட்டோம் - மத நல்லிணக்கத்தைக் கெடுத்திட பா.ஜ.க.வினர் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்; நாங்கள் இடம் தர மாட்டோம்” என்று கூறி வந்தது. அப்போது பி.ஜே.பி. எல்.எல்.ஏ., சி.டி.ரவி (தமிழக பா.ஜ.க.வின் பொறுப்பாளர்) தலைமையில் ஊர்வலமாகச் சென்ற குழு, அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்று கூறி சில தஸ்தாவேஜுகளைக் காட்டிட, சிலர் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி அந்த இடத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த முஸ்லீம் கல்லறைகளை உடைத்தெறிந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த அந்த இடத்தில் உயர் போலிஸ் அதிகாரியாக அண்ணாமலை இருந்தார்! இந்துக்களும், முஸ்லிம்களும் தங்கள் புனித இடமாகக் கருதி மத நல்லிணக்கத்தோடு புனிதப் பயணம் மேற்கொண்ட பகுதி வன்முறைக் களமாகியது. பல ஆண்டு காலமாக அமைதி வழியில் நடந்து வந்த வழிபாட்டில், அண்ணாமலை அந்தப் பகுதியின் காவல் துறை அதிகாரியாக இருந்த காலத்தில்தான் வன்முறை வெடித்தது.
இந்தச் சம்பவத்தால் அண்ணாமலை தலைமையில் செயல்பட்ட காவல்துறை மீது மக்கள் மரியாதை இழந்து விட்டனர் - என்று கூறலாமா? அரைக்கால் வேக்காட்டுத்தனமாக அறிக்கை விட்டுத் திரியும் அண்ணாமலை, தி.மு.கழகம் எனும் மலையோடு மோதினால் அவரது மண்டைதான் உடையும் என்பதை உணர்ந்திட வேண்டும்!
- சிலந்தி
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?